கரோனா காலகட்டத்தில் அமெரிக்க விசா பெறுவதற்கான காத்திருப்பு காலம் நீட்டிக்கப்பட்டது. இதனால், அமெரிக்காவுக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். விசா பெறுவதற்கான காத்திருப்புக் காலகட்டத்தை குறைக்கும்படி இந்தியவெளியுறவுத் துறை அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்தது.
இந்நிலையில், இவ்வாண்டு அதிக எண்ணிக்கையில் இந்தியர்களுக்கான விசாவுக்கு ஒப்புதல் அளிக்க அமெரிக்க தூதரகம் முடிவு செய்துள்ளது.
வேலை, படிப்பு, சுற்றுலா,வணிகம் என பல வகைகளில்அமெரிக்க விசா வழங்கப்படுகிறது.
தற்சமயம் வேலை விசாவுக்கான காத்திருப்புக் காலம் 60 – 280 நாட்களாகவும், சுற்றுலா விசாவுக்கான காத்திருப்புக் காலம் ஒன்றரை ஆண்டாகவும் உள்ளது. இந்நிலையில், கூடுதல் அதிகாரிகளை நியமித்தும், சனிக்கிழமைகளில் தூதரக அலுவலகங்களைத் திறந்தும் விசா ஒப்புதல்
நடைமுறையை துரிதப்படுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத் தலைவர் ஜான் பல்லார்ட் கூறியதாவது:
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் கடந்த ஆண்டில் 8 லட்சம் விசாவுக்கு ஒப்புதல்அளித்தது. இவற்றில் கல்விக்கான விசா மட்டும் 1.25 லட்சம் ஆகும்.
இந்த ஆண்டில் இன்னும் அதிக விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
அதேபோல், முதல் முறையாக பி1, பி2 சுற்றுலா மற்றும் தொழில்முறை பயணவிசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு காத்திருப்புக் காலம்
குறைக்கப்படுகிறது.
சமீபத்தில் இந்தியாவில்2.5 லட்சம் பி1 மற்றும் பி2 விசாக்களை வெளியிட்டுள்ளோம்.
விசா புதுப்பிக்க இனி மக்கள் மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பம் அனுப்பலாம்.
அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கான நடை முறையை எளிமைப்படுத்தும் நோக்கில் விசா காத்திருப்புக்
காலத்தை குறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். இவ்வாறு ஜான் பல்லார்ட் கூறினார்.