கற்றலில் மாணவர்கள் இடைநிற்றலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஜி20 கல்வி
மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளதாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்தார்.
ஜி20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பு இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதையொட்டி கல்வி சார்ந்த கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி சென்னையில் ஜன.31 முதல் பிப்.2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. அதில் ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்க உள்ளனர். முதல் நாளில் ‘கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்கு’ என்ற தலைப்பில் சிறப்புக்கருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் நடைபெறுகிறது. முக்கிய முடிவுகள்: இதில், பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் ஒவ்வொரு நாடுகளும் பின்பற்றும் பாடத்திட்டங்கள், செயல்பாடுகள், திறன் மேம்பாடு குறித்து விவாதிக்கப்பட உள்ளது. அதன்பின் பிப்.1, 2-ம் தேதிகளில் நடைபெறும் கல்வி மாநாட்டில் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: அனைத்து நாடுகளிலும் மாணவர்கள் இடைநிற்றல் இருக்கிறது. நம் நாட்டில் 13 கோடி பேர் மாணவப் பருவத்தில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் பட்டதாரிகளாக மாற்றுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த தகவல்களை இந்த கருத்தரங்கம் வாயிலாக எதிர்பார்க்கலாம். கருத்தரங்கில் மொத்தம் 29 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் பேசப்படும் அனைத்து நல்ல கருத்துகளையும் சேர்த்து ஒரு கொள்கையாகக் கொண்டு வருவதற்கான திட்டமும் பரிசீலனையில் உள்ளது. கரோனா காலத்தில் கல்வியில் டிஜிட்டல் தொழில் நுட்பத்தின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. அதன் பின்னும் கல்வியில் தொழில்நுட்ப தேவை உயர்ந்து இருக்கிறது. இதுகுறித்தும் கருத்தரங்கில் விவாதிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்வின்போது மத்திய கல்வித்துறை இணை செயலர் நீதா பிரசாத், ஜி20 கல்வி பிரிவின் தலைவர் சைதன்யா பிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.