ஈரோடு கிழக்கு தொகுதி சட்ட மன்ற தேர்தலில் பணப்பட்டுவாடா எப்படி செய்ய வேண்டும் என்பது பற்றிய அமைச்சரின் வீடியோ ஆதாரங்களை தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் சத்யா பிரதா சாகுவிடம் பாஜக தலைவர்கள் சமர்ப்பித்து திமுக மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவை அளித்தனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் வேட்பாளரை நியமித்துள்ள நிலையில், தேர்தல் தொடர்பான கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என் நேரு ஓட்டுக்கு பணம் கொடுப்பது தொடர்பான ஆடியோவை பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அதில் திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி என்றும் பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி என்றும் சாடியிருந்தார். மேலும் கோவையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், ஈரோடு கிழக்கு தொகுதியில், அமைச்சர் நேரு 31ம் தேதிக்குள் பணம் கொடுத்து முடிக்க வேண்டும் என்று சொல்கிறார் என்றும். எந்தெந்த அமைச்சரால் பணம் கொடுக்க முடியும், எந்தெந்த அமைச்சரால் பணம் கொடுக்க முடியாது என பேசுகிறார் என்றும் தெரிவித்திருந்தார். தேர்தல் ஆணையத்திடம் இந்த வீடியோவைக் கொடுக்க இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டிருந்தார். தான் அந்த வீடியோவை எடிட் செய்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு சொல்வதை குறிப்பிட்ட அவர், அதை அவர் நிரூபித்துக் காட்டினால் நான் அரசியலைக் விட்டு விலகத் தயார் என்றும் தெரிவித்திருந்தார். உண்மையான ஆடியோ என்பது உறுதி செய்யப்பட்டால் முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்கமாக பொதுமன்னிப்பு கேட்கவேண்டும்.’ எனத் தெரிவித்திருந்தார். ஆதாரங்கள் சமர்ப்பிக்கபட்ட பின்னரும் அமைச்சர் மீது தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என காத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் திமுக அமைச்சருக்கு எதிராக பாஜக சார்பில் தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையரிடம் புகாரளிக்கப்பட்டுள்ளது.
பாஜக சார்பில் மாநில துணைத் தலைவர்கள் கே.பி.ராமலிங்கம், பால் கனகராஜ், நாராயணன் திருப்பதி, கராத்தே தியாகராஜன் ஆகியோர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே,பி ராமலிங்கம், போதுமான ஆதாரங்களுடன் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாகவும், நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.பி ராமலிங்கம், திமுகவுக்கு எதிரான புகார்களை ஆதாரத்துடன் வழங்கியுள்ளதாகவும், தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.