கடந்த ஆகஸ்டு மாதத்தில் இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் ஸ்டாலினுக்கு 60% ஆதரவு இருந்தது, ஆனால் ஆறு மாதம் கழித்து அதே இந்தியா டுடே சர்வேயில் 44 % ஆக சரிவடைந்தது. ஆறு மாதத்தில் யாருக்கும் இல்லாத வகையில் 16% சரிவு. 2024 தேர்தலுக்கு முன்பு இது 20% என்று சரிந்து விடும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டி:
இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் எப்படி இருக்கும் என்பதற்கு நேற்று வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கை அச்சாரமாக இருக்கும். அடுத்து வரும் 25 ஆண்டுகள் நம் நாட்டுக்கு ‘அம்ருத காலம்’ என்று நிதி அமைச்சர் கூறியுள்ளார். 2023 மிக முக்கியமான ஆண்டு. இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழகத்துக்கு மிக அதிக அளவில் நிதி ஒதுக்கீடு இருக்கும் என்பது எனது நம்பிக்கை.
சர்வதேச நிதியத்தின் ஆய்வின்படி நம் நாட்டின் வளர்ச்சி விகிதம் 2023ல் 6.8% ஆக இருக்கும். நகர்ப்புற வேலை, நோய்த்தொற்று காலகட்டத்துக்கு முந்தைய நிலையை அடைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து யாரோடு என்ன பேசினோம் என்பது பற்றி பேசுவது நியாயமாக இருக்காது. பொறுத்திருங்கள். நீங்களே காண்பீர்கள் ஒரு இடைத்தேர்தலுக்கே ரூ. 10,000 கொடுக்கலாமா ரூ. 20,000 கொடுக்கலாமா? 10,000 பேரை அழைத்து வந்து தங்க வைக்கலாமா என்றுதான் அமைச்சர் கே என் நேரு , ஈ.வி.கே. எஸ். இளங்கோவன் போன்றவர்கள் பேசுகின்றனர் . மக்களுக்கு என்ன செய்வோம் என்பதைப்பற்றி பேசவில்லை.
இடைத்தேர்தல் ஒரு கட்சியின் பலத்தைப் பரீட்சித்துப் பார்ப்பதற்கு அல்ல. இரண்டு மாதத்தில் மக்கள் மறந்து விடுவார்கள். 2024 ஐப் பற்றியும் நினைக்க வேண்டும். இடைத் தேர்தலில் எப்போதுமே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும். பண பலம் வேலை செய்யும் . எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேச மாட்டோம்.
கடலுக்கு நடுவே பேனா சிலை வைக்க திமுக திட்டமிடுவது பற்றி: நமது மீனவ அணியின் தலைவர் முனுசாமி அவர்கள் கூறியதுதான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. அந்த இடம் சுற்றுச் சூழல் அடிப்படையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இடம். 13 மீன் பிடி கிராமங்களுக்கு இதனால் பிரச்னை உள்ளது.
இங்கு சிலை வைக்கும் கலாச்சாரம் அதிகமாக உள்ளது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இதற்காக அரசின் பணத்தைச் செலவழிக்கிறார்கள். நேற்று நடத்திய கூட்டத்தில் நமது கட்சியின் பிரதிநிதி முனுசாமி அவர்களைப் பேச விடாமல் கூச்சல் போட்டு ‘வெளியே வந்தால் அடிப்போம்’ என்று அச்சுறுத்தினர். அது ஏதோ அரசு நடத்திய கூட்டம் போல் தோன்றவில்லை. திமுக மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் போல்தான் இருந்தது. அவர்கள் அறிவாலயக் கூட்டத்தில் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் பொது இடத்தில், அரசு நடத்தும் கூட்டத்தில் இவ்வாறு நடக்கக் கூடாது. ஏகமனதாக அனைவரும் கூறியது ‘ அந்த இடத்தில் சிலை வைக்க வேண்டாம்’ என்பதே. பேனா சிலை விஷயத்தில் மீனவர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள், மக்கள் ஆகியோருடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம். எங்களது மீனவ அணித் தலைவர் முனுசாமி காலையில் படகை எடுத்துக் கொண்டு மீன் பிடிக்கச் செல்பவர். அவர்கள் சொல்வதுதான் எங்களது கருத்து.
திமுக தனது பலத்தைப் பயன்படுத்தி இதைச் செய்வோம் என்றால் ஜனநாயகத்தில் மக்கள் விரும்ப மாட்டார்கள். 2022 ஆகஸ்டு மாதத்தில் இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் ஸ்டாலின் அவர்களுக்கு 60% ஆதரவு இருந்தது, ஆனால் ஆறு மாதம் கழித்து அதே இந்தியா டுடே சர்வேயில் 44 % ஆக சரிவடைந்தது. ஆறு மாதத்தில் யாருக்கும் இல்லாத வகையில் 16% சரிவு. 2024 தேர்தலுக்கு முன் இது 20% என்று சரிந்து விடும்.
மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். ஒரு அமைச்சர் கல்லெடுத்து அடிக்கிறார், இன்னொருவர் தொண்டரை அடிக்கிறார். ஒரு எம்.பி ‘கோயிலை இடிப்பேன்’ என்று கூறுகிறார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் திமுகவுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைத் தரும்” என பேசியுள்ளார்.
தொகுப்பு இரா.ஸ்ரீதரன்.