பா.ஜ.க ஆன்மிகத்தை மையமாக வைத்து இயங்கும் மாபெரும் இயக்கம். பாதயாத்திரையின் போது மக்கள் காட்டிய அன்பையும், அக்கறையையும் வைத்து, அதை முழுமையாக உணர முடிந்தது என பாஜகவின் தேசிய மகளிர் அணித்தலைவியும், கோவை தெற்கின் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ. வானதி, தைப்பூசத்தை ஒட்டி கோவையில் இருந்து, 31.01.23 அன்று திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். இதை தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார்.
நடைபயணத்தின்போது உடுமலைப்பேட்டையில் வானதி சீனிவாசன் கூறியதாவது: பழநி
முருகனின் தீவிர பக்தை நான். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட போது, வெற்றிக்காக முருகனிடம் வேண்டினேன். வெற்றியோடு பாதயாத்திரையாக சென்று, நேர்த்திக் கடன் நிறைவேற்றுவது என முடிவு எடுத்தேன். கடும் போட்டியிலும் இறைவன் என்னை வெற்றி பெற வைத்து விட்டார். அடுத்து, நாட்டு மக்கள் நலன் மற்றும் நாட்டுக்காக தினமும் உழைக்கும் பிரதமர் மோடியின் உடல் நலன் இரண்டும் முக்கியம். கோவை தெற்கு தொகுதி வெற்றிக்கான வேண்டுதலோடு, இந்த இரண்டு வேண்டுதலும் சேர்ந்துகொள்ள, திட்டமிட்டபடி பாதயாத்திரை துவங்கினேன்.
ஒரு பெண்ணாக தொடர்ச்சியாக, 105 கி.மீ., துாரம் நடக்க முடியுமா என, பலரும் கேட்டனர். மன உறுதி இருந்தால், எதையும் சாதிக்கலாம். எதை பற்றியும் கவலைப்படாமல், முருகனை மட்டும் மனதில் வைத்து பாதயாத்திரையை துவக்கினேன். திட்டமிட்ட நேரத்துக்கு முன்பாகவே பழநியை அடைவேன்.
முருகனை தரிசித்து வேண்டுதலை முடித்து, அடுத்த அரசியல் பணியை துவக்குவேன். பா.ஜ.க ,ஆன்மிகத்தை மையமாக வைத்து இயங்கும் மாபெரும் இயக்கம். பாதயாத்திரையின் போது மக்கள் காட்டிய அன்பையும், அக்கறையையும் வைத்து, அதை முழுமையாக உணர முடிந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள், பழநிக்கு பாதயாத்திரை செல்கின்றனர். அவர்களோடு சேர்ந்து நடந்தது நல்ல அனுபவம். முழு நேர அரசியலில் இருக்கும் எனக்கு, மக்கள் உணர்வுகளை புரிந்து
கொள்ளவும் இந்த யாத்திரை வாயிலாக முருகன் அருள் புரிந்திருக்கிறார்” எனக் கூறினார்.