குப்பம்பாளையத்தை சேர்ந்த மூத்த சுதந்திரப் போராட்ட தியாகி கே.முத்துசாமி (101) உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி அவர்கள் அஞ்சலி செலுத்தினார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகில் உள்ள குப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் கே.முத்துசாமி. சுதந்திரப் போராட்ட தியாகியான இவர் வெள்ளையனே வெளியேறு என்ற இயக்கத்தை காந்தி அறிவித்தபோது, போராட்டத்தில் ஈடுபட்டு சிறை தண்டனை பெற்றவர்.
101 வயது ஆன இவர் உடல் நலக்குறைவு காரணமாக கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (2.02.2023) அதிகாலை காலமானார். மறைந்த சுதந்திர போராட்ட தியாகி முத்துசாமிக்கு, காளியம்மாள் என்ற மனைவியும் காந்தி, ஜோதி என்ற இரு மகள்களும் உள்ளனர்.
இவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக குப்பம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டது. மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சி.சரஸ்வதி, உள்ளிட்ட ஏராளமானோர் தியாகி முத்துசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். மாலையில் அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குப்பம்பாளையத்தில் அடக்கம் செய்யப்பட்டது.