ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தவரை பாஜக நிலைப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என அண்ணாமலை அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுகவுக்கு எதிராக வலுவான ஒரு வேட்பாளரை நிறுத்தினால் மட்டுமே எளிதாக வெற்றி பெற முடியும் என்ற தங்களது நிலைப்பாட்டை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரிடமும் மீண்டும் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்தில் ஒரு வேட்பாளர் போட்டியிட்டால் பாஜகவினர் களத்திற்கு வந்து உழைப்பாளர்கள் என்றும் கூறினார். உறுதியான, வலிமையான ஒரு வேட்பாளரை அதிமுக நிறுத்தினால் அவர் பின்னால் அனைவரும் அணி திரள்வோம் எனவும் வெற்றி வாய்ப்பு எளிதாகும் எனவும் தெரிவித்தார்.
திமுக மீதும் அதன் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மீதும் பொதுமக்கள் கடுமையான அதிருப்தியில் இருக்கிறார்கள் எனவும் கூறிய அவர், கடந்த மக்களவை தேர்தலில் அனைத்து தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றும், ஈவிகேஎஸ் இளங்கோவன் தோற்றதையும் சுட்டிக்காட்டினார். பாஜகவை அவதூறாக பேசி பொன்னையன் வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளித்த அவர், சமீபத்தில் பொன்னையன் பேசிய ஆடியோ ஒன்று வெளியானதையும், அது தனது குரலே இல்லை என பொன்னையன் பல்டி அடித்ததையும் சுட்டிக்காட்டினார்.
மேலும் பீகாரில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்ததையும், தேர்தலில் ஐக்கிய ஜனதா தளத்தை விட அதிக தொகுதிகள் வென்றும் முதலமைச்சர் பதவியை அக்கட்சிக்கே வழங்கியதையும் சுட்டிக்காட்டினார். இதேபோல மகாராஷ்ட்ராவில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து தேர்தலின் வென்றதாகவும், தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு சிவசேனா புதிதாக சில நிபந்தனைகளை விதித்ததால் தான் கூட்டணி முறிந்ததாகவும் கூறினார். பாஜக தனது பலத்தினால் மட்டுமே வளர விரும்புவதாகவும் மற்ற கட்சிகளின் பலவீனத்தினால் பாஜக வளருவதை தான் விரும்பவில்லை எனவும் கூறினார்.
.