மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு என ரூ.11,313 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு என ரூ.6,080 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அதில் தெரிவித்துள்ளர்.
டெல்லியில் இருந்து காணொளி மூலம் அனைத்து மண்டல மேலாளர்கள், செய்தியாளர்களிடம் அவர் பேசியாவது: ‘நாட்டின் அதிக தூரம் கொண்ட 2 முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தற்போது வந்தே பாரத் என்ற அதிவிரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
அந்த வரிசையில், வந்தே மெட்ரோ ரயில் தயாரிக்கப்பட உள்ளது. 100 கி.மீ. தொலைவுக்கு குறைவாக உள்ள இரு நகரங்களை இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை இயக்கப்படும்.
பசுமை எரிசக்திக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஹைட்ரஜன் வாயு மூலம் இயக்கப்படும் ரயில் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் தயாரிக்கப்படும். நடப்பு 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.11,313 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.6,080 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டிற்குள் ஒதுக்கப்பட்ட ரூ.879 கோடியை விட 7 மடங்கு அதிகம்.
நாடு முழுவதும் 1,000 ரயில் நிலையங்களில் தினசரி பொருட்களை வாங்கும் வகையில் பல்பொருள் அங்காடிகள் அமைக்கப்பட உள்ளன. தமிழகம், கேரளாவில் இவை அதிக அளவில் இடம்பெறும்.
நடப்பு நிதி ஆண்டில் 250 ரயில்களுக்கான பெட்டிகளும், அடுத்த நிதி ஆண்டில் 320 ரயில்களுக்கான பழைய பெட்டிகளும் நீக்கப்பட்டு, புது பெட்டிகள் இணைத்து இயக்கப்படும். அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் பழைய ரயில் பெட்டிகள் அனைத்தும் புதிய பெட்டிகளாக மாற்றப்படும் என தெரிவித்திருந்தார்.
அமைச்சரை தொடர்ந்து பேசிய தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்: ‘தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் புதிய ரயில் பாதைகளை அமைக்க ரூ.1,057.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் இரட்டை ரயில் பாதை அமைக்க ரூ.1,321.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். தெற்கு ரயில்வே கடந்த 2022-23ம் ஆண்டில் ரூ.8,100 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த 2021-22ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 45.6 சதவீதம் அதிகம் எனக் கூறினார்.
புதிய ரயில்பாதை அமைக்க ரூ.1,158 கோடி, அகலப்பாதை பணிக்கு ரூ.475.78 கோடி, இரட்டை பாதை பணிக்கு ரூ.1,564.88 கோடி, ரயில் பாதை புதுப்பித்தல், சிக்னல் தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சென்னை சென்ட்ரல், தாம்பரம், ஆவடி, கோயம்புத்தூர், கும்பகோணம், திருநெல்வேலி உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதற்கான சாத்தியக் கூறு அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார்.
ஒவ்வொரு கோட்டத்திலும் 15 ரயில் நிலையங்கள் என மொத்தம் 90 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன என்றும் வரும் ஜுன் மாதம் புதிய பாம்பன் ரயில் மேம்பாலம் திறக்கப்படும் என்றும் கூறினார். சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க ரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் ஒப்புதல் கிடைத்ததும் இந்த சேவை தொடங்கப்படும் என்றும் கூறினார்
டிக்கெட் பணியாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள பயிற்சி அளித்து வருவதாகவும் கூறினார். சென்னை புறநகரில் இந்த ஆண்டு இரண்டு 12 பெட்டிகள் கொண்ட ரயில் சேவை இயக்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு 12 ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவித்தார்.