திருநெல்வேலி – ஆதிச்சநல்லுார் அருகே வாழ்விட பகுதிகளில் அகழாய்வினை மத்திய தொல்லியல் துறையினர் நேற்று (05.02.2023) துவக்கினர்.
துாத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி கரைக்கு அருகில் உள்ள ஆதிச்சநல்லுாரில் மத்திய தொல்லியல் துறையினரும், சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழகத் தொல்லியல் துறையினரும் அகழாய்வு மேற்கொண்டனர். இதில் பல தொன்மை சின்னங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
ஆதிச்சநல்லுாரில் சர்வதேச தரத்திலான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என 2020 மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதுவரை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பகுதிகள் உடல்களை தாழிகளில் வைத்து புதைக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.
மனிதர்களின் வாழ்விடப் பகுதிகளிலும் ஆய்வு மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. துாத்துக்குடி மாவட்டம் அகரம், கொங்கராயகுறிச்சி, கால்வாய், கருங்குளம், திருக்கோளூர் ஆகிய 5 இடங்களில் ஆய்வு மேற்கொள்ள அகழாய்வு பணியை நேற்று துவங்கியது.
திருக்கோளூரில் நடந்த நிகழ்வில் மத்திய தொல்லியல்துறை திருச்சி மண்டல இயக்குனர் அருண்ராஜ் பணிகளை துவக்கி வைத்தார்.
தமிழர்களின் வரலாற்றை பதிவு செய்வதில் ஆதிச்சநல்லூர் மிக முக்கிய அகழ்வாராய்ச்சி இடமாக திகழ்ந்து வருவது குறிப்பிட தக்கது.