உலகிலேயே மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் நீதிமன்றம் இந்திய உச்ச நீதிமன்றம்தான் சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான நீதிபதி சுந்தரேஷ் மேனன் கூறியுள்ளார்.
இந்திய உச்ச நீதிமன்றம் 73-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதை தொடர்ந்து சனிக்கிழமை (4.02.2023) டெல்லியில் நடந்த விழாவில் சிங்கப்பூர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான சுந்தரேஷ் மேனன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அவர் பேசியதாவது: இந்திய நீதிமன்ற நீதிபதிகள் மிகக் கடினமாக உழைக்கிறார்கள். நீதி வழங்கல் முறை பயனாளர்களை மையமாகக் கொண்டதாக இருப்பதற்கு முக்கியத்துவத்தை அளித்துள்ளனர். திறமை மற்றும் நேர்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு மட்டுமே நீதிபதிகள் தேர்வு நடைபெறுகிறது. உலகிலேயே மிகவும் பரபரப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் நீதிமன்றம் இந்திய உச்சநீதிமன்றம் தான்.
நீதிமன்றங்கள் நீதிபதிகளுக்காகவோ அல்லது வழக்கறிஞர்களுக்காகவோ உருவாக்கப்பட்டவை அல்ல. வழக்குத் தொடுப்பவர்களுக்காக உருவாக்கப்பட்டவை, வழக்கு தொடுக்க வருபவர்கள் தங்கள் நீதிமன்றங்களில் வாதாட வசதியான சூழல் இருக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.