ஜெய்ப்பூரில் நடந்த விளையாட்டு விழாவில் விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. எனவே தான், இத்துறைக்கான பட்ஜெட் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது, என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார்.
பா.ஜ.க.வின் லோக்சபா எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் விளையாட்டு விழா நிகழ்ச்சியை நேற்று (05.02.2023) நடத்தினார்.
அந்த நிகழ்ச்சியில், காணொளி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: “நாட்டின் 75வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடி வரும் வேளையில், நாடு புதிய வரையறைகளையும், புதிய ஒழுங்கையும் உருவாக்கி வருகிறது. விளையாட்டுத் துறையை அரசின் பார்வையில் இருந்து அணுகாமல், விளையாட்டு வீரர்களின் பார்வையில் அணுகத் துவங்கியுள்ளோம். பணம் இல்லை என்ற காரணத்துக்காக, திறமையான வீரர் வாய்ப்பை இழந்துவிடக் கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக உள்ளது. எனவே தான், சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு ஆண்டுக்கு, 5 லட்சம் ரூபாய் உதவித் தொகையை அரசு அளிக்கிறது. விளையாட்டுத் துறை மீது நம் இளைய தலைமுறையினருக்கு உள்ள ஆர்வத்துக்கும், திறமைக்கும் குறைவில்லை.
கடந்த காலங்களில் போதிய நிதி ஒதுக்கி, ஆதரவு அளிக்க அப்போதைய அரசுகள் தவறியதால் தான், பல தடைகளை அவர்கள் சந்தித்தனர். அதற்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையை தங்கள் வாழ்க்கையாக தேர்ந்தெடுக்க இளைய தலைமுறையினரை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. கடந்த 2014க்கு முன், விளையாட்டுத் துறைக்கு 800 – 850 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு வந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் 2,500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது, மூன்று மடங்கு அதிகம்”. என நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.