இலங்கையின் சுதந்திர தினத்தில் கலந்து கொண்ட மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன் ‘இலங்கையின் நம்பகமான நண்பனாக இந்தியா உள்ளது’ என தெரிவித்தார்.
இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்ச்சியில் பாரதத்தின் சார்பில் மத்திய இணையமைச்சர் வி.முரளீதரன் கலந்து கொண்டார். அதில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வையும் அவர் சந்தித்துப் பேசினார். இதுதொடர்பாக வி.முரளீதரன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளதாவது: “இலங்கையின் 75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் அண்டை நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியா எப்போதும் இலங்கையின் நம்பகமான பங்காளியாகவும், நம்பகமான நண்பராகவும் உள்ளது” என பதிவிட்டிருந்தார்.
சந்திப்பின் போது முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு அளிக்கும் 13வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்துவது குறித்தும் இன நல்லிணக்கம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை வெற்றிகரமாக அமல்படுத்துவதற்கு தனது வாழ்த்துகளையும் அமைச்சர் முரளீதரன் தெரிவித்ததாக அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.