தமிழகத்தில் இலவசம் மின்சாரம், மின்சார மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6ம் தேதி தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி, நவம்பர் 28ம் தேதி முதல் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர்.
மக்களின் கருத்துகளுக்கு செவிமடுக்காமலும் சரியான திட்டமிடுதல் இன்றியும் அவசர கதியில் துவக்கப்பட்ட இத்திட்டத்தில் ஆரம்பம் முதலே பல குளறுபடிகள்
நடந்தன. இணையதளத்தில் ஏற்பட்ட குழப்பங்களால் மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி துவங்கப்பட்டது. பின்னர் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரியை அறிமுகம் செய்தது. இப்படி செய்தும், ‘நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணோம்’ எனும் ரீதியில் டிசம்பர் மாதத்தில் சில நாட்களாக இணையதளங்களில் மக்கள் பதிவேற்றியது அனைத்தும் அழிந்துவிட்டதாக
கூறினர். பின், டிசம்பர் 31ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு, பிறகு ஜனவரி 31ம் தேதி வரை அது நீட்டிக்கப்பட்டது. பிறகு அது பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இதுவரை 97 சதவீத பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். இந்நிலையில் மின் இணைப்பு எண்களுடன் ஆதார் எண்களை இணைத்ததில் குளறுபடி நடைபெற்றுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இது குறித்து மின்சார வாரியம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், “உரிமையாளர், குத்தகைதாரர், இணை உரிமையாளரின் ஆதார் எண்கள் அவர்களுக்குத் தெரியாமலேயே மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆதார் இணைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுகிறது என்பதை காட்டுவதற்காகவே அதிகளவிலான மின் இணைப்பு எண்களுடன் தொடர்பில்லாத ஆதார் எண்கள் இணைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் மூலம் திட்டத்தின் நோக்கமே தோற்கடிக்கப்பட்டுள்ளது. எனவே களப்பணியாளர்கள் இதனை கண்காணித்து உரிமையாளர்களின் ஆதார் எண் மட்டுமே மின் இணைப்புடன் இணைக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் என்றும், உயர் அதிகாரிகள் இதில் தனி கவனம் செலுத்த வேண்டும்” என அந்த உத்தரவில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.