தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இலங்கைத் தமிழர் பிரச்சனை மற்றும் ஈரோடு இடைத்தேர்தல் பற்றியும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட திலிருந்து:
ஜி 20 தலைமையை பாரதம் ஏற்றுள்ள இந்த ஆண்டில் நம் நாட்டுக்கே உரிய யோகா, ஆயர்வேதம் சார்ந்த சில விஷயங்களை உலகம் முழுதும் எடுத்துச் செல்லும்படி பிரதமர் மோடி அவரகள் கூறியுள்ளார்.. இந்த ஆண்டை சிறுதானியங்களின் ஆண்டாக ஐநா சபை அங்கீகரித்துள்ளது. இந்தியாவின் சிறு தானியங்கள் உலகம் முழுதுக்கும் செல்ல ஆரம்பித்துள்ளன .சமீபத்தில் சென்னை ஐஐடி யில் ஜி-20 கல்வி மாநாடு மூன்று நாட்கள் நடந்துள்ளது. 198 இடங்களில் 55 மாநகரங்களில் நடக்க உள்ளது. தமிழ் நாட்டிலும் கோயம்புத்தூர், சென்னை, மஹாபலிபுரம் ஆகிய இடங்களில் நடக்க உள்ளது. இதைக் குறிக்கும் விதமாக பாஜக 10 லட்சம் மரக் கன்றுகளை 2023ல் நட திட்டமிட்டுள்ளது.
இன்று இந்த நிகழ்ச்சியைத் துவக்கியுள்ளோம். சென்னையில் மட்டும் 15,000 மரக் கன்றுகளை நடவுள்ளோம். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நட்டு பராமரிக்க வேண்டும். பொதுவாக ஒரு மரம் நான்கு அடி உயரம் வளரும் வரை நன்கு பாதுக்காக்க வேண்டும்.
ஆகவே பெயரளவில் நடாமல் ஒவ்வொருவரும் இதைத் தங்களது மரமாகக் கருதி பராமரித்துப் பாதுக்காக்க வேண்டும்.
முதல் கட்டமாக பள்ளி மாணவர்கள், சமூக ஆர்வலர்களுக்கு மரக் கன்றுகளை அளித்துள்ளோம்.
‘நம் நாடு ஜி-20 ன் தலைமை ஏற்ற ஆண்டில் நான் இந்த மரக்கன்றை நட்டேன்’ என்று அதை நடுபவர் எண்ணும் வகையில் இருக்க வேண்டும். மேலும் 2047ல் நம் நாடு வல்லரசாக மாறும் என்று நமது பிரதமர் கூறியுள்ளார். அப்போதும் அந்த மரத்துடன் அதை நட்டவர் தன்னை அடையாளப் படுத்திக் கொள்ளலாம்.
நடைப்பயணம் செல்லும் இடங்களிலெல்லாம் மரக் கன்றுகளை நட இருக்கிறோம். அதிலும் நமது மண்ணுக்கு உகந்த நாட்டு மரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
நாம் நடும் மரங்களால் சுற்றுச் சூழலுக்கு நன்மை ஏற்பட வேண்டும் , மக்களுக்கும் நன்மைகள் ஏற்பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே வேம்பு போன்ற மரக் கன்றுகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.
இது மாநில விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் பிரிவின் வழிகாட்டுதலில் நடக்கிறது.
அனைவருக்கும் நன்றி. கட்சினருக்கும் ஒரு அறிவுரை. பெயரளவுக்கு நடாமல் கன்றுகளை வாங்குபவர்களுக்கு விஷயங்களை விளக்கி அதை 25 ஆண்டுகள் நன்கு பராமரிக்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.
பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்.
தமிழக மீனவர் நலன் சார்ந்த விஷயங்களை இலங்கையுடன் பேச இருக்கிறோம். என்னென்ன விஷயங்களை பாஜக முன்னெடுக்க உள்ளது என்று கேட்டால் பிரிட்டிஷ் ஆட்சி கால விஷயங்கள்; கச்சதீவை திமுக ,காங்கிரஸ் தாரை வார்த்தது, ராஜிவ் காந்தி -ஜெயவர்த்தனே உடன்படிக்கை போன்ற பல விஷயங்களைப் பேசவேண்டியிருக்கும்.
13 ஆவது சட்டத் திருத்தம் பெயரளவுக்கு அமல்படுத்தப் பட்டது. வடகிழக்குப் பகுதி வாழ் தமிழர்களுக்கு
சுயாட்சி அதிகாரம் இல்லை. இதை நமது பிரதமர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
அதில் காவல்துறைக்கான மற்றும் நிலம் சம்மந்தப்பட்ட அதிகாரங்கள் இல்லை. இதை இப்போது நமது அரசு குறிப்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் திரு.ஜெய்ஷங்கர் இதை உடனடியாக கையிலெடுத்தே தீர வேண்டும் என்று கொஞ்சம் கடுமையாகவே பேசியுள்ளார்.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டுள்ளது. அதே சமயம் தமிழக பாஜக, இலங்கையின் மலையகத் தமிழர்களுக்காக அல்லது வடகிழக்குப் பகுதித் தமிழர்களுக்காகப் போராடும் கட்சிகளுடன் ஒரு நட்புறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கையின் சுதந்திரதினம் பிப்ரவரி நான்காம் தேதி கொழும்பு மற்றும் கண்டியில் கொண்டாடப்பட்டது. வரும் 11 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில் கொண்டாடப்படவுள்ளது.
2017 ல் நமது பிரதமர் இலங்கை சென்ற போது யாழ்ப்பாணத்தில் இந்திய இலங்கைத் தமிழர் கலாசார மையம் அமைப்பதற்காக நிதி அளிக்கப்பட்டது. உலகத்தில் எங்குமே இல்லாத வகையில் மிகச் சிறப்பான ஒரு மையமாக அது உள்ளது. அதையும் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவரகள் திறந்து வைக்கவுள்ளார். நமது மத்திய அரசின் சார்பாக மத்திய அமைச்சர் முருகன் அவர்கள் செல்லவிருக்கிறார். இலங்கையின் அரசியல் கட்சிகளின் அழைப்பை ஏற்று கட்சியின் சார்பாக நானும் செல்லவிருக்கிறேன்.
தமிழக மீனவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 111 படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நமது அமைச்சர் முருகன் அவர்கள் இலங்கையின் மீன்வளத்துறை அமைச்சருடன் பேச்சு நடத்த உள்ளார். இங்கே உள்ள சில கட்சிகள் இலங்கைத் தமிழருக்கு நாங்கள் அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று வாய் ஜம்பம் அடித்துக் கொண்டுள்ளனர். ஆனால் பாரதீய ஜனதா கட்சி படிப்படியாக வேலை செய்து இந்த விஷயத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்.
இலங்கையில் பலாலியில் விமான நிலையம் அமைக்க நமது பிரதமர் உதவி செய்துள்ளார். அதனால் எளிதாக யாழ்ப்பாணம் செல்ல முடிகிறது. சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே விமான சேவை துவங்க வேண்டும் என்ற எங்களின் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இப்போது நாங்கள் அந்த சேவையை உபயோகித்தே யாழ்ப்பாணம் செல்லவிருக்கிறோம்.
இலங்கைக்கும் தமிழகத்துக்கும் கப்பல் சேவையும் துவங்க உள்ளது.
எதிர்க் கட்சிகளைப்போல் வெறும் வாய்ச்சவடால் அடிக்கவில்லை. ரயில் சேவைகள் ,சாலை வசதிகள் , விமான நிலையங்கள் போன்றவை அமைப்பதற்கும் நாம் உதவி செய்துள்ளோம். நமது பிரதமர் மைக்கை எடுத்துக் கொண்டு நான் அதைச் செய்தேன், இதைச் செய்தேன் என்று சொல்வதில்லை.
ஈரோடு கிழக்கு இடை தேர்தல் குறித்து:
வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சிக்கு திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மற்றும் செங்கோட்டையன் அவர்கள் அழைத்துள்ளனர். நான் இலங்கை செல்லவிருப்பதால் என்னால் செல்ல இயலவில்லை. கட்சியின் மூத்த தலைவர் . சி.பி. ராதாகிருஷ்ணன் செல்கிறார்.
எங்களது கட்சியின் அனைத்துத் தலைவர்களும் தேர்தல் பிரச்சாரத்தில் இறங்குவார்கள்.
நிச்சயமாக பிப்ரவரி 27 வாக்குப் பதிவின்போது அ.இ.அ.தி.மு.க.வின் வேட்பாளர் வெற்றி வேட்பாளராக மாறுவார்.
நானும் பிரச்சாரத்தில் கலந்து கொள்வேன். கர்நாடகா தேர்தல் வேலையும் உள்ளது. ஆனால் அதிமுகவை வெற்றி பெற வைப்பதற்குத்தான் முன்னுரிமை.
சமூக வளைத்தளத்தில் யாரோ எதையாவது போடுவது முக்கியம் அல்ல. நமது தார்மீகக் கடமையைத்தான் நாம் பின்பற்ற வேண்டும்.
முதலமைச்சர் இரண்டு நாள் சூறாவளிப் பிரச்சாரம் செய்தார். ஒரு இடைத்தேர்தலுக்கு அனைத்து அமைச்சர்களும் களம் இறங்கியுள்ளதைப் பார்க்கும்போது திமுகவுக்கு பயம் வந்து விட்டது என்பது தெரிகிறது.
ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசினாலே எங்களுக்கு வாக்குகள் கூடும்.
யாருக்குப் பணம் கொடுப்பது என்றெல்லாம் பேசினார்.
கதர் சட்டையைப் போட்டுக் கொண்டு ‘நான் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவன்’ என்று பண்ணையார் அரசியல் நடத்தியது இளங்கோவன்தான்.