சென்னை எம்ஜிஆர், சென்ட்ரல், சென்னை எழும்பூர் உட்பட தமிழகத்தில் உள்ள 73 ரயில் நிலையங்களை மேம்படுத்தப்பட அம்ரித் பாரத் ரயில் நிலையம் என்னும் திட்டத்தை இந்திய ரயில்வே தற்போது முன்னெடுத்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வேயின் கீழ் உள்ள 1,275 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டு, நவீனப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 73 ரயில் நிலையங்கள், புதுச்சேரி யூனியனில் 3 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக ரயில் நிலையத்தை எளிதாக அணுகுதல், தங்குமிட வசதிகள், கழிவறைகள், மின்தூக்கி வசதிகள், சுகாதாரம், இலவச வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் ஒரு நிலையம், ஒரு தயாரிப்பு என்னும் திட்டத்தின் கீழ், உள்ளூர் பொருட்கள் விற்பனை நிலையம், பயணிகள் தகவல் மையம், வணிகம் சார்ந்த கூட்ட அரங்குகள் உள்ளிட்ட வசதிகள் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்கள் பெறும். மேலும், கட்டிடங்களை மறுசீரமைத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த வசதிகள் உள்ளிட்ட வசதிகள் இந்த திட்டத்தின் கீழ் அடங்கும்.
சென்னை எம்ஜிஆர் சென்ட்ரல், சென்னை எழும்பூர், மதுரை, தஞ்சாவூர், திருச்செந்தூர், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், பழனி, கும்பகோணம், கன்னியாகுமரி, ராமேஸ்வரம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய ரயில் நிலையங்களும் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.