கோயமுத்தூரில் (13.02.2023) மதியம் இருவரை வெட்டி விட்டு மர்ம கும்பல் தப்பி சென்றது.
சம்பவம் நடந்த இடத்திலேயே ஒருவர் இறந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ‘கோவை நகரம் கொலை நகரமாகிக் கொண்டிருப்பதாக’ விமர்சித்துள்ளார். கோவை கீரனத்தம் பகுதியை சேர்ந்த கோகுல், சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்த மனோஜ் ஆகிய இருவர் மீதும் கஞ்சா உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு தொடர்பாக ஆஜராக கோவை நீதிமன்றத்திற்கு வந்தவர்களை, 5 பேர் கொண்ட கும்பல் இருவரையும் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றது. இதில், கோகுல் சம்பவ இடத்திலேயே பலியானார். மனோஜ், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தமிழக பா.ஜ.க, தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: “கொலை நகரமாகிக் கொண்டிருக்கும் கோவை. கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற
வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கி கலாச்சாரமும் தலையெடுத்துள்ளது.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது. கொலை, கொள்ளைச் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் அதிகரித்து இருக்கின்றன. போலீசின் கைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. போலீசாருக்கே பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. ஒட்டு மொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டு, பொதுமக்கள் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை உண்டாக்கி, அதில் தமிழகத்தை
தள்ளியிருக்கிறது திறனற்ற திமுக அரசு. உடனடியாக முதல்வர், அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பா.ஜ.க சார்பாக வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.