நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மருத்துவ சேவை வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளை ஏற்றிச் செல்லும் ரயில்களிலும், நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களிலும் மருத்துவ வசதிகளை வழங்க இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் மருத்துவ வசதிகளை வழங்குவதன் அவசியம் மற்றும் அளவு குறித்து உச்சநீதிமன்றம் ஆய்வு செய்தது. இந்த உத்தரவுகளுக்கு இணங்க, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (எய்ம்ஸ்) நிபுணர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அனைத்து ரயில் நிலையங்களிலும், பயணிகளை ஏற்றிச்செல்லும் ரயில்களிலும் மருத்துவத்திற்கென தனிப் பெட்டிகளை வழங்கவும், ரயில் ஊழியர்களுக்கு முதலுதவி பயிற்சி அளிக்கவும், ரயிலில் சக பயணிகளாக பயணிக்கும் மருத்துவர்கள் மூலமும், அவசரகால மருத்துவ வசதிகளை வழங்கவும் குழு பரிந்துரைத்துள்ளது. நிபுணர்கள் குழு பரிந்துரையின்படி, அனைத்து ரயில் நிலையங்களிலும், பயணிகள் செல்லும் ரயில்களிலும்
உயிர்காக்கும் மருந்துகள், உபகரணங்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளிட்டவை அடங்கிய மருத்துவப்பெட்டியை வழங்க சம்பந்தப்பட்ட இயக்குனரகத்திற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ரயில் டிக்கெட் பரிசோதகர்கள், ரயில்வே காவலர்கள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், ஊழியர்கள் முதலுதவி அளிப்பதில் பயிற்சி பெற்று வருகின்றனர். அத்தகைய ஊழியர்களுக்கு வழக்கமான புத்தாக்க படிப்புகளும் நடத்தப்படுகின்றன. மேலும், அருகிலுள்ள மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்களின் பட்டியல் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் அனைத்து ரயில் நிலையங்களிலும் கிடைக்கும். ரயில்வேயின் ஆம்புலன்ஸ் சேவைகளைத் தவிர மாநில அரசு, தனியார் மருத்துவமனைகளின் ஆம்புலன்ஸ் சேவைகள், தனியார் ஆம்புலன்ஸ் சேவை வழங்குநர்களின் சேவையும் காயமடைந்த, நோய்வாய்ப்பட்ட பயணிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.