மாநிலங்களவையில் விவசாயிகளிடம் ட்ரோன்களின் பயன்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கைக்காக மத்திய அரசிடமிருந்து சுமார் ரூ.127 கோடி விடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக மத்திய அமைச்சர் தெரிவித்த தகவலில், ‘இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலான ஐ.சி.ஏ.ஆர் மூலம் 300 கிசான் ட்ரோன்களை வாங்குவதற்காக ரூ. 52.5 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் 75,000 ஹெக்டேர் விளைநிலங்களில் டுரோன்கள்
குறித்து செய்முறை விளக்கம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாய பயன்பாட்டுக்கான ட்ரோன்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கும் பணிகளில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அதிக கவனம் செலுத்தி வருகிறது. இதேபோல், இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின்கீழ் இயங்கும் வேளாண் அறிவியல் மையம் (கே.வி.கே), மாநில வேளாண்மை பல்கலைக் கழகங்கள் மற்றும் வேளாண் துறை அமைப்புகளுக்கு கிசான் ட்ரோன்களின் விலையில் 100 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் மானிய உதவியாக வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் கிசான் ட்ரோன்களை வாங்க முன்வரும் தனிநபர்கள், சிறு குறு விவசாய அமைப்புகள் பழங்குடியின பெண்கள் மற்றும் வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆகியோருக்கு ட்ரோன் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 5 லட்சம் வழங்கப்படுகிறது. மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 4 லட்சம் மானியமாக வழங்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.