கோவையில் அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு கொலைகளால் மாவட்டம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்
கோவை நீதிமன்ற வாசலில் வைத்து கோகுல் என்பவர் கும்பல் ஒன்றால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த தாக்குதலில் மனோஜ் என்பவர் படுகாயமடைந்தார். இதேபோல ஆவாரம்பாளையம் பகுதியில் சத்தியபாண்டி என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த கொலை சம்பவங்களை தடுக்க தவறிய தமிழக அரசுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், கோவையில் பொதுமக்கள் மத்தியிலும், நீதிமன்ற வளாகத்திலும் கொலை சம்பவங்கள் நடைபெற்றுள்ளதுடன் துப்பாக்கி கலாச்சாரமும் தலைதூக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே சட்டம் ஒழுங்கு சந்தி சிரித்து கொண்டிருப்பதாகவும், கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். காவல்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளதாகவும், காவல்துறையினருக்கே பாதுகாப்பாற்ற சூழல் நிலவுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒட்டுமொத்த அமைச்சர்களையும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிக்கு அனுப்பிவிட்டு, பொதுமக்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழலை உண்டாக்கி அதில் தமிழகத்தை தள்ளியுள்ளதாகவும் திறனற்ற திமுக அரசு எனவும் அவர் விமர்சித்துள்ளார். உடனடியாக அரசின் அடிப்படை கடமையான சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்தி, பொதுமக்கள் அச்சமின்றி வாழ கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.