ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களை பட்டியில் திமுக வினர் அடைத்து வைத்துள்ளதால், தொழில்கள்
முடக்கம் அடைந்துள்ளதாக தேர்தல் கமிசனுக்கு புகார்கள் வந்து குவிகின்றன என தெரிவித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், ஆளும்கட்சி வழங்கும் பிரியாணி, பணம், பரிசு பொருட்களை பெற்று,
பட்டியில் அடைபட்டுக் கிடக்கும் தொழிலாளர்களால், வேலைக்கு ஆட்கள் இன்றி ஈரோட்டில் தொழில்கள் முடங்கி
உள்ளன. இது பற்றி நெசவாளர்கள் பலர் தேர்தல் கமிஷனுக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் (18.01.2023) ம் தேதி அறிவிக்கப்பட்டது. அடுத்த சில நாட்களில் திமுக பிரசாரம்
துவங்கியது. இதுவரை எந்த தேர்தல்களிலும் இல்லாத வகையில், ஈரோடில், எதிர்க்கட்சிகளின் பிரசாரத்திற்கு
வாக்காளர்கள் செல்லாத வகையிலும், எதிர்க்கட்சியினர் அவர்களை சந்திக்க முடியாத வகையிலும், ஆங்காங்கே
ஆளும்கட்சியினர் வாக்காளர்கள் பட்டி அமைத்து, அங்கு மக்களை அடைத்து வைத்துள்ளனர்.
இதற்காக, பட்டிக்கு வரும் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், பிரியாணி வழங்கப்படுகிறது. இதற்கு
அடிமையாகி, தொழிலாளர்கள் பலரும், பட்டியில் அடைந்து கிடக்கின்றனர். இதனால் நெசவு, ஜவுளி சார்ந்த
அனைத்து தொழில்களும், டீக்கடை, பேக்கரி, ஹோட்டல், வாகனம் சார்ந்த தொழில்களும் முடங்கியுள்ளன.
ஈரோட்டில் விசைத்தறியில் வேட்டி, சேலை தயார் செய்யும் பணி நடக்கிறது. ஒரு நபர், 10 தறியில் பணி செய்தால்
ஒரு நாளில், ஐந்து சேலை அல்லது, ஏழு வேட்டி ஓட்டுவார். அதற்கு, 300 – 350 ரூபாய் கூலி கிடைக்கும். தார்
போடுதல் எனப்படும் ராட்டு நுால் போடும் பணிக்கு, 250 ரூபாய் கிடைக்கும்.
காலையில் தறி ஓட்ட வருபவர்கள், மாலை, 5:00 மணிக்கு பின் ஓட்டினால், 100 ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.
மாலை, 5:00 மணியானதும், ‘கட்சியில் கூப்பிடுகின்றனர். மாலை, 6:00 மணி முதல், 9:00 மணி வரை கட்சி
ஆபீஸில் உட்கார்ந்திருந்தால், 500 ரூபாய், சாப்பாடு தருவர்’ எனக்கூறி, ஊழியர்கள் சென்று விடுகின்றனர்.
மேலும், காலையில் கட்சி அலுவலகத்துக்கு வந்தால், கூடுதலாக, 500 ரூபாய் கிடைக்கும் என்பதால், தொழிலார்கள்
பலர் நெசவு சார்ந்த விசைத்தறி தொழிலுக்கு செல்லாமல், அழைப்பு வந்ததும் தேர்தல் பணிமனைக்கு போய்
உட்கார்ந்துவிடுகின்றனர்.இதேபோல, டீக்கடை, பேக்கரி, பேக்கரி மற்றும் ஸ்வீட் ஸ்டாலில் உணவு பண்டம்
தயாரிப்பவர்கள், ஓட்டல் பணியாளர்கள், இலை எடுப்போர், சாப்பாடு பரிமாறுவோர், லாரி டிரைவர், கிளினர்,
டெய்லர், மளிகை கடையில் வேலை செய்வோர் என அனைவரும் பட்டியை நோக்கி படையெடுக்கின்றனர்.
இவர்கள், (27.02.2023) வரை வேலைக்கு வரமாட்டோம் என, வேலை பார்க்கும் இடத்தில் தெரிவித்து விட்டனர்.
இதனால் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுளன. ஜவுளியில் நெசவு, காடா துணி சுத்தம் செய்தல், மடித்தல்,
சாய, சலவை, பிளிச்சிங், கேலண்டரிங் என அனைத்து பணிக்கும் இதே நிலை உள்ளதால், 50 சதவீதத்துக்கு மேல்
உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆளுங்கட்சியினர் உட்பட அரசியல் கட்சிகள், 400 கோடி ரூபாய் வரை
செலவு செய்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதே சமயம், கூலி ஆட்கள் பணிக்கு வராததால், ஈரோடு மாநகரின்
தொழில் வளம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், உற்பத்தி சரிவு மற்றும் அதன் அடுத்தடுத்த நிலைகளில், பல
ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபற்றி, தேர்தல் ஆணையம் மட்டுமின்றி, சட்டத்துறை, நீதிமன்றம், மத்திய அரசும் இணைந்து, நேர்மையான
தேர்தலை நடத்த முயல வேண்டும் என தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஈரோடு மாநகராட்சி அலுவலக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு
நேற்று காலை, 11:00 மணி வரை, 455 புகர்கள் வந்துள்ளன. இதில், 50 புகார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இப்புகாரில், 100க்கும் மேற்பட்ட புகார் தொழில் சார்ந்தது. தங்கள் பகுதியில் பணம் கொடுப்பதை தடுக்க
வேண்டும். அரசியல் கட்சிகள் பணம் கொடுப்பதால் நெசவு, ஜவுளி சார்ந்த துணி மடித்தல், நுால் சுற்றுதல், ஸ்டிக்கர்
ஒட்டுதல்,பேக்கரி தொழிலுக்கு ஆட்கள் வர மறுக்கின்றனர் என, கூறியுள்ளனர். நாங்களும், பறக்கும் படை
உள்ளிட்டோரை அனுப்பி சோதனை செய்தாலும், நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இவ்வாறு கூறினார்.