திமுகவின் சிறுபான்மை ஓட்டு வங்கிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காகவே, சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளிக்காமல், உச்ச நீதிமன்றத்தில், திமுக அரசு
மேல் முறையீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 1925-ல் விஜயதசமியன்று ஆர்.எஸ்.எஸ்., துவங்கப்பட்டது. அதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும், சீருடை
அணிந்த தொண்டர்கள் அணிவகுப்பை, ஆர்எஸ்எஸ் நடத்தி வருகிறது.
தமிழகத்திலும் கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடந்து வருகிறது. இந்நிலையில்,
(2.10.2022) காந்தி ஜெயந்தியன்று நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு, தமிழக காவல் துறை அனுமதி
மறுத்தது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, 2022
நவம்பர் 6-ம் தேதி, கடலுார், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் ஆகிய இடங்களில் அணிவகுப்பு நடந்தது. மற்ற
மாவட்டங்களில், பொது இடங்களில் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில்,
ஆர்எஸ்எஸ் மேல்முறையீடு செய்தது.
விசாரித்த உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ‘சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கும் அதே
நேரத்தில், மக்களின் பேச்சுரிமை, கருத்துரிமையை தடுக்கும் வகையில், காவல் துறை செயல்படக் கூடாது.
ஆர்எஸ்எஸ் அனுமதி கோரினால், அணிவகுப்புக்கு அனுமதிக்க வேண்டும்’ என, காவல் துறைக்கு உத்தரவிட்டது.
அதன்படி அனுமதி அளிக்காமல், உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு
மேல்முறையீடு செய்துள்ளது.
இது தொடர்பாக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு 70
ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பால் எங்கும் சட்டம் — ஒழுங்கு பிரச்னை
ஏற்பட்டதில்லை. கடலுார், கள்ளக்குறிச்சி, பெரம்பலுாரில் அமைதியாகவே அணிவகுப்பு நடந்தது. கருணாநிதி
முதல்வராக இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தபோது, அதை
பொருட்படுத்தாமல் அனுமதி வழங்கினார். தங்களுக்கு எதிரான கொள்கை உள்ள அமைப்பின் செயல்பாடுகளை
முடக்க நினைப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்காமல், திமுக அரசு பிடிவாதம்
காட்டுவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிறுபான்மையினர் தான் தி.மு.க.,வின் அடிப்படை ஓட்டு வங்கி. ஜெயலலிதா மறைவுக்கு பின்,
சிறுபான்மையினரின் ஓட்டுகளை முழுமையாக திமுக அறுவடை செய்து வருகிறது.
ஆர்எஸ்எஸ் – பாஜக எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறோம் என்பதை காட்டினால் தான், சிறுபான்மையினர்
ஓட்டுகளை தக்க வைக்க முடியும். மேலும், ஈரோடு கிழக்கு தொகுதியில் சிறுபான்மையினர் ஓட்டுகள் கணிசமாக
உள்ளன. இந்த நேரத்தில், ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி அளித்தால் பாதிப்பு ஏற்படும் என்பதால், உச்ச
நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல் முறையீடு செய்துள்ளதாக, திமுகவினர் தெரிவிக்கின்றனர்.