பாகிஸ்தானுடன் தொடர்புடைய தேச விரோத கும்பலை பிடிக்க நாடுமுழுவதும் 70 இடங்களில் என்ஐஏ சோதனை

பாகிஸ்தானுடன் தொடர்புடைய தேசவிரோத கும்பல்களை பிடிக்கும் வகையில் 8 மாநிலங்களில் 70 இடங்களில்
தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று (21.02.2023) தீவிர சோதனை நடத்தினர்.

பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாத குழுக்கள் செயல்படுகின்றன. இந்த குழுக்களுக்கு பாகிஸ்தான் உளவு
அமைப்பான ஐஎஸ்ஐ ஆயுதம் மற்றும் நிதியுதவியை வழங்கி வருகிறது. இவை தவிர, லாரன்ஸ் பிஷ்னோய், நீரஜ்
பவானா, பாம்பிகா உள்ளிட்ட தேச விரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இவை பாகிஸ்தான்
தூண்டுதலின்பேரில் பயங்கரவாத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றன.

டெல்லி, உத்தர பிரதேசம், பஞ்சாப்,ஹரியாணா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், சண்டிகர் யூனியன்
பிரதேசம் ஆகிய 8 மாநிலங்களில் சமூக விரோத கும்பல்கள் ஆழமாக கால் ஊன்றியுள்ளன. இந்த மாநிலங்களில்
என்ஐஏ அதிகாரிகள் நேற்று(21.02.2023) திடீர் சோதனை நடத்தினர்.
டெல்லி அடுத்த குருகிராமின் பல்வேறு இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் ரவுடி கவுசல் சவுத்ரி
பிடிபட்டார்.
ஹரியாணாவின் சோனிபட், சிர்சா, நர்னால் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதங்கள்
கைப்பற்றப்பட்டன. நர்னாலில் ரவுடி சிக்கு என்பவர் சிக்கினார். இவர்கள் நீரஜ் பவானா சமூக விரோத கும்பலை
சேர்ந்தவர்கள்.
பஞ்சாபில் லாரன்ஸ் பிஷ்னோய், கனடாவை சேர்ந்த ரவுடிகள் கோல்டி பிரார், லக்பிர் லண்டா ஆகியோர்
தொடர்புடைய 30 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சண்டிகர் யூனியன் பிரதேச பகுதியிலும் சோதனை
நடைபெற்றது.

உத்தர பிரதேசத்தின் 3 மாவட்டங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். பிலிபட் பகுதியில் தில்பாக் சிங்
என்பவரது வீட்டில் 4 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. சமூகவிரோத கும்பல்களுக்கு அவர் ஆயுதங்களை
விநியோகம் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தின் பிரதாப்கர் பகுதியில் லாரன்ஸ் பிஷ்னோய், நீரஜ் பவானாவுடன் தொடர்புடைய சிலரது
வீடுகளில் 50-க்கும் மேற்பட்ட என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் பலர் சிக்கினர். முக்கிய
ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
ராஜஸ்தானில் ஜோத்பூர், சிகார், பலாசர், கங்காநகர் உள்ளிட்ட பகுதிகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை
நடத்தினர். இதில் சிகார் பகுதியில் பிரபல ரவுடி அனில் பாண்டியா வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. அவர் மீது
கொலை வழக்கு உட்பட 39 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 4 மாநில போலீசார் அவரைதேடி
வருகின்றனர். அவரது வீட்டில் இருந்து ஹவாலா பணப் பரிமாற்றம் தொடர்பான முக்கிய ஆவணங்கள்
கைப்பற்றப்பட்டன.
மத்திய பிரதேசத்தில் உஜ்ஜைன், நாக்டா, ரட்லம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு
மே மாதம் பஞ்சாபின் மொகாலியில் போலீஸ் உளவுத் துறை அலுவலகம் மீது சிறிய ரக ராக்கெட் குண்டு வீசி
தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் தொடர்புடைய சிலர் மத்திய பிரதேசத்தில் சிக்கினர். அவர்களது விவரங்கள்
வெளியிடப்படவில்லை.
குஜராத்தின் கட்ச் பகுதியில் ரவுடி குல்வீந்தர் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இவர் லாரன்ஸ்
பிஷ்னோய்க்கு மிகவும் நெருக்கமானவர். அவரது வீட்டிலும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
தலைமறைவாக உள்ள குல்வீந்தரை என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
என்ஐஏ அதிகாரிகள் கூறியதாவது, “ லாரன்ஸ் பிஷ்னோய், நீரஜ் பவானா ஆகியோர் சிறையில் உள்ளனர்.
அவர்களிடம் கடந்த 6 மாதங்கள் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 8 மாநிலங்களில் 70-க்கும்
மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தி உள்ளோம். பாகிஸ்தானுடன் தொடர்புடைய இந்த தேசவிரோத
கும்பல்கள் கூண்டோடு அழிக்கப்படும்’’ என்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top