6 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீட்டில் இந்தியாவில் விலை உயர்ந்த மருந்துப் பொருள்களை தயாரிக்க
நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய சுகாதாரம், ரசாயனம், உரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா
தெரிவித்தாா்.
அவா் கூறுகையில், ‘சுயசாா்பு இந்தியா திட்டத்தின்கீழ் மருந்துத் துறையில் 6 ஆண்டுகளில் ரூ.15 ஆயிரம் கோடி
முதலீட்டில் இந்தியாவில் விலை உயர்ந்த மருந்துப் பொருள்களை தயாரிக்கும் திட்டம் 2021-இல்
தொடங்கப்பட்டது.
இதன்படி, விலை உயர்ந்த மருந்துகளை உள்நாட்டிலேயே தயாரிக்க ஊக்கத் தொகை அளிக்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் 55 நிறுவனங்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இதில் 20 சிறு, குறு நிறுவனங்களும் அடங்கும்.
இதில் நான்கு நிறுவனங்களுக்கு ரூ.166 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் உள்நாட்டு உற்பத்தியை
அதிகரித்து இறக்குமதியைக் குறைக்கும்’ என்றாா்.
மேலும் இது தொடா்பாக ரசாயனம், உரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: இந்தத் திட்டத்தின் முதல்
ஆண்டிலேயே ரூ.16,199 கோடிக்கான முதலீடுகள் ஈா்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 ஆண்டுகளில் 1 லட்சம்
பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தற்போதே 23 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளன.
இந்தத்திட்டத்தின் கீழ் மொத்த மருந்துகள் தயாரிக்க ரூ.6,940 கோடி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அவசர தேவையான
மொத்த மருந்துகளின் உற்பத்தியை இது அதிகரிக்கும். ரூ.3,420 கோடியில் மருந்துவ உபகரணங்களை
இந்தியாவிலேயே தயாரிக்க 21 போ் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.