மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் சமய மாநாட்டை ஹைந்தவ சேவா சங்கமே நடத்தும் என்று இந்து சமய
அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தகவல்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் மாசிக் கொடை விழாவை முன்னிட்டு ஹைந்தாவ சேவா சங்கம் சார்பில்
ஒவ்வொரு ஆண்டும் சமய மாநாடு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மாநாட்டை இந்து சமய
அறநிலைத்துறையால் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதால், இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும்
எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர்.போராட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்டம் முழுவதும் பெண்கள்
கையில் விளக்கு ஏற்றி வீதிகளில் வழிபாடு செய்தனர். மாநில அரசு இதனால் அச்சமடைந்தது.
இந்நிலையில் இந்து சமய மாநாட்டை நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு,
இந்து அமைப்பு நிர்வாகிகளிடம் நேற்று (21.02.2023) பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் பாஜக முன்னாள் மத்திய
இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில ஆலோசகர் மிசா சோமன் ஹைந்தவ சேவா
சங்க பொதுச் செயலாளர் ரத்தின பாண்டியன் மற்றும் இந்து அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது: ‘மண்டைக்காடு பகவதி
அம்மன் கோயிலில் மாசி கொடை விழாவின் போது சமய மாநாடு நடத்துவது தொடர்பாக இந்து சமய அறநிலை
துறை மற்றும் ஹைந்தவ சேவா சங்கம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சிகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால்
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சமய மாநாட்டை ஹைந்தவ சேவா சங்கமே நடத்தும் அவர்களுக்கு உறுதுணையாக
இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து பணியாற்றும் சமய மாநாடு நிகழ்ச்சியில் சிறு சிறு மாற்றம்
செய்வதற்கு இரு தரப்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன எவ்வித பிரச்னைக்கும் இடம் தராத வகையில் சிறப்பு
விருந்தினர்கள் அழைக்கப்படுவர். மாநாட்டில் பங்கேற்க அழைத்தால் நானும் கலந்து கொள்வேன். என
தெரிவித்தார்.
ஒருங்கிணைத்த இந்துக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது என இந்து இயக்கங்கள் தெரிவித்தன.
மண்டைக்காடு பகவதி அம்மன் பாதுகாப்பு குழு போராடிய மக்களுக்கும் நன்றி தெரிவித்தது.