ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும், அதை தாங்கள் பெறப்போவதில்லை என்று சு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதிலடி

ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும், அதை தாங்கள் பெறப்போவதில்லை என்று
சு.வெங்கடேசனுக்கு தமிழிசை பதில் அளித்துள்ளார்.
தெலங்கானா மாநில ஆளுநராகவும், புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் தமிழிசை
சௌந்தரராஜன் கோவையில் சில நாட்களுக்கு முன்பு பேசுகையில், “தமிழக மக்கள் எங்களைப்
போன்ற நிர்வாகத் திறன் கொண்டவர்களையும், திறமையானவர்களையும் அங்கீகரிக்கவில்லை.
ஆனால் மத்திய அரசு எங்களது திறமையை அடையாளம் கண்டுள்ளது. தமிழக மக்கள் எங்களை
அடையாளம் கண்டிருந்தால் நாங்கள் எம்.பிக்கள் ஆகி நாடாளுமன்றம் சென்றிருப்போம். மத்திய
அமைச்சர்கள் ஆகியிருப்போம். ஆனால் தோற்கடிக்கப்பட்டதால், எங்களின் திறமையை அறிந்த
மத்திய அரசு, அதனை வீணடிக்க வேண்டாம் என கருதி ஆளுநர்களாக நியமனம் செய்துள்ளது.”
என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், “ராஜ்பவன்கள்
எல்லாம் பெயிலானவர்கள் படிக்கிற டுடோரியல் கல்லூரிகள் என்கிறீர்களா தமிழிசை
அவர்களே.” என்றும் பிரதமர் குறித்தும் தெரிவித்திருந்தார்.
இதற்கு தமிழிசை சவுந்தரராஜன் பதில் அளித்துள்ளார்: ” ராஜ்பவன்கள் டுடோரியல் ஆக உள்ளது
என்று வெங்கடேசன் சொல்கிறார். டுடோரியல் ஒன்றும் கேவலமான இடமல்ல… அதுவும் கல்வி
பயிலும் புனிதமான இடம் தான்… டுடோரியலில் படிப்பவர்கள் கூட படித்து அறிவாற்றல் பெற்று
தேர்வாகிறார்கள். தங்களைப் போல அறிவாலய வாசலில் நின்று பெற்றது அல்ல….
தேர்தல் வெற்றி மட்டுமே ஒருவருக்கு அங்கீகாரம் கிடையாது… ராஜ்பவன்கள் பயிற்சி
பட்டறைகளாக இருக்கலாம்… அரண்மனை வாரிசுகளை உருவாக்கும் இடமாக இல்லை என்பதில்
பெருமையே….
நேற்று வென்றவர்கள் நாளை தோற்கலாம்… நேற்று தோற்றவர்கள் நாளை வெல்லலாம்…
இறுமாப்பு வேண்டாம்… ஆளுநர் ஆவதற்கும் பல சிறப்பு தகுதிகள் வேண்டும்… அதைப்போன்ற
தகுதிகளை தாங்கள் பெறப்போவதில்லை… மறுபடியும் சொல்கிறேன் இறுமாப்பு வேண்டாம்.”
என கூறியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top