சென்னை ஆளுநர்மாளிகையில் கடந்த 21ம் தேதியன்று, ‘பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா சிந்தனைச் சிதறல்கள்’ மற்றும் ‘பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா ஒருங்கிணைந்த மனிதநேயம்’ ஆகிய புத்தகங்களின் தமிழாக்கம் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி, இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆன பின்பும் ஏழை நாடாக உள்ளதற்கு கார்ல் மார்க்ஸ் சிந்தனைகளை பின்பற்றியதே காரணம் என குற்றம்சாட்டினார். கார்ல் மார்க்சின் சிந்தனை இந்தியாவை சிதைத்தது என்றும் தற்போது மார்க்சின் தத்துவம் புறந்தள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் ஆளுநரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பத்தாம்பசலி சிந்தனைகளுடன் வர்ண பேதத்தை பாதுகாக்க நினைப்போருக்கு, மார்க்ஸ் கருத்துகள் கசப்பு மருந்துதான் என கூறியிருந்தார்.
இந்நிலையில் பொன்முடியின் அறிக்கைக்கு எதிர்வினையாற்றியுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தன் ஒரு மகனை பாராளுமன்ற உறுப்பினராகவும், இன்னொரு மகனை கிரிக்கெட் சங்கத் தலைவராக்கியும் அழகு பார்க்கும் அமைச்சர் பொன்முடி, பொதுவுடைமை குறித்துப் பேசுவதெல்லாம், திமுகவுக்கே உரித்தான நகைமுரண் எனத் தெரிவித்துள்ளார்.
பொதுவுடைமை, பாகுபாடு பாராமை, அனைவருக்கும் சம உரிமை என்றெல்லாம் கார்ல் மார்க்ஸ் கொள்கைகளாகக் கூறும் அமைச்சர், அவரது தொகுதியில் அவரது கட்சி உறுப்பினர்கள் எத்தனை பேருக்கு சம உரிமை கொடுத்திருக்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியார், திருச்சியில் 1943 ஆம் ஆண்டு அதே பிப்ரவரி 21 அன்று, “கம்யூனிசம் என்பது இனிப்பு தோய்க்கப்பட்ட விஷ மாத்திரை” என்றும் “இளைஞர்கள் கம்யூனிஸ்ட்களிடம் கவனமாக இருக்க வேண்டும்” என்றும் பேசியிருப்பதாக, தி.க. தலைவர் கி. வீரமணி அவர்கள் எழுதிய ‘Collected works of Periyar EVR’ என்ற புத்தகத்தில் எழுதியிருப்பதற்கு, அமைச்சர் பொன்முடி ஏதேனும் கருத்து சொல்வாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
பொய்யைத் திரும்பத் திரும்பச் சொன்னால் உண்மை ஆகிவிடும் என்பதும் திமுகவின் ஒரு கொள்கை எனவும் விமர்சித்துள்ளார்.