கர்நாடகாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து ஆட்சியமைக்கும் என அண்ணாமலை கூறியுள்ளார். கர்நாடகாவில் தேர்தல் பிரசாரம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்
கர்நாடகாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தின் மேலிட இணைப்பொறுப்பாளராக பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்காகவும், கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் அவர் கர்நாடகா சென்றுள்ளார்
அம்மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்துக்கு சென்ற அவர், அங்கு பாஜக மாவட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தென்னிந்தியாவில் மிக வேகமாக வளரும் மாநிலங்களில் கர்நாடகா முன்னணியில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் இந்த முறை கர்நாடகாவில் 150க்கும் மேற்பட்ட இடங்களை வென்று பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனத் தெரிவித்தார்.
மேலும் தமிழ்நாட்டில் பாஜக மிக வேகமாக வளருவதாக தெரிவித்த அவர், 2024 மக்களவை தேர்தலில் அதிக எம்பிக்களை பாஜக நாடாளுமன்றத்துக்கு அனுப்பும் எனவும் கூறினார். 2024 மக்களவை தேர்தலிலும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலிலும் தமிழ்நாடு பாஜக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டில் திமுக அரசு தனது சுய கெளரவத்தை இழந்து விட்டதாக தெரிவித்த அவர், ஒரு ராணுவ வீரருக்கு எவ்வாறு மரியாதை அளிக்க வேண்டுமென்ற அடிப்படை அறிவு கூட அக்கட்சிக்கு இல்லை எனவும் விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து கர்கலா என்ற பகுதியில் பாஜக இளைஞரணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இருசக்கர வாகன பேரணியிலும் அவர் கலந்து கொண்டார். இந்தப் பேரணியில் அவருடன், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா மற்றும் கர்நாடக எரிசக்தி துறை அமைச்சர் கர்கலாசுனில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், வெறும் வெற்று உறுதிமொழிகளை அளித்து, காங்கிரசால் கர்நாடக மக்களை ஏமாற்ற முடியாது எனத் தெரிவித்தார். மேலும் பாஜக இரட்டை என்ஜின் அரசின் ஆட்சியில், கொண்டுவரப்பட்ட சமூகநல திட்டங்களின் நன்மைகளை கர்நாடக மக்கள் நன்கு உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.