ஒருங்கிணைப்பில் கவனம் செலுத்த வேண்டும்; பிரிப்பதில் வேண்டாம்; ஜி-20 நாடுகளுக்கு பிரதமர் அட்வைஸ்

ஜி-20 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் இரண்டு நாள் கூட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. ஜி-20 நாடுகளின் பிரதிநிதிகள், ஜி-20யில் உறுப்பினர் அல்லாத 40 நாடுகளின் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் முதல் அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், உலகின் பல பகுதிகள் இன்று பிரச்சினையில் உள்ளன என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கடந்த சில வருடங்களாக உலகம் அனுபவித்து வரும், நிதி நெருக்கடி, காலநிலை மாற்றம், பெருந்தொற்று பொதுமுடக்கம், பயங்கரவாதம், போர் போன்றவை சர்வதேச ஆட்சிமுறை தோல்வியடைந்து விட்டதை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

பல வருட கால முன்னேற்றங்களுக்கு பின்னர், நீடித்த வளர்ச்சியின் இலக்குகளை எட்டுவதில் இன்று நாம் பின்னோக்கி செல்லும் அபாயத்தில் உள்ளோம். பல வளரும் நாடுகள் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய தாங்கமுடியாத கடன்களில் போராடுகின்றன. பணக்கார நாடுகளால் ஏற்படுகின்ற வெப்பமயமாதல் விளைவுகளையும் அந்த நாடுகள் எதிர்கொள்கின்றன. இதனால்தான், இந்தியா தலைமை வகிக்கும் இந்த ஜி20, உலகளாவிய தெற்கின் குரலாக ஒலிக்க முயல்கிறது.

உலகம் தீவிரமாக பிரிந்திருக்கும் நேரத்தில் நாம் அனைவரும் இங்கு கூடியிருக்கிறோம். தற்போது இந்த அறையில் இல்லாதவர்களுக்காகவும் நாம் பொறுப்பேற்க வேண்டும். முடிந்த வரையில் நம்மால் ஒன்றிணைந்து தீர்க்க முடியாத பிரச்சினைகள் உருவாவதை நாம் அனுமதிக்கக் கூடாது. உலகிற்கு தலைமை வகிக்க முயலும் எந்த ஒரு குழுவும், பாதிக்கப்படுகிறவர்களின் கருத்துக்களை கேட்காதபோது, அக்குழுவால் உலகளாவியத் தலைமைக்கு உரிமை கோர முடியாது. நாம் அனைவரும் எது நம்மை ஒருங்கிணைக்கிறது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். எது நம்மை பிரிக்கிறது என்பதில் இல்லை.” இவ்வாறு பிரதமர் பேசினார்.

இதனிடையே வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டத்திற்கு வருகை தந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குயின் கேங் மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோரை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது, இந்தியா- சீனா எல்லையில் படைகளை திரும்ப பெறுவது மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

முன்னதாக கூட்டம் தொடங்குவதற்கு முன்னால் அண்மையில் சிரியா மற்றும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களுக்கு ஜி-20 தலைவர்கள் மெளன அஞ்சலி செலுத்தினர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *