தமிழகத்தில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் ஒருவித அச்சம் பரவிய நிலையில், அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி செல்வதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக தமிழ்நாட்டில் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கும்பல் கும்பலாக சொந்த ஊருக்கு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகின. பண்டிகைகளை கொண்டாட வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதாக கூறப்பட்டாலும், மற்றொருபுறம் தொழிலாளர்கள் அச்சத்தின் காரணமாகவே சொந்த ஊர் செல்வதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. தமிழ்நாடு அரசின் சார்பிலும் இந்த விவகாரத்தில் வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக ஆரம்பித்து வைத்த வெறுப்பு பிரசாரத்தின் விளைவாகவே வடமாநிலத் தொழிலாளர்கள் தற்போது சொந்த ஊர்களுக்கு செல்வது அதிகரித்துள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆதங்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,திமுகவின் வெறுப்புப் பிரச்சாரம், தற்போது, ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு வந்திருக்கிறது. இந்தி எதிர்ப்பு என்ற பெயரில், வட மாநில மக்களை ஏளனமாகப் பேசுவதும், அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்துவதுமான திமுக கலாச்சாரத்தின் விளைவுதான் இன்றைய நிலைக்குக் காரணம்.
திமுக ஆரம்பித்த காலத்திலிருந்து, தற்போது வரை, ஏதோ ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை விதைத்துக் கொண்டே இருந்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த கடந்த இரண்டு ஆண்டுகளில், திமுக எம்பிக்கள், அமைச்சர்கள் பேசிய ஏளனப் பேச்சுக்கள் எத்தனை?
திமுக எம்பி தயாநிதி மாறன், வட மாநிலத் தொழிலாளர்களை, எங்கள் வீட்டு வேலை செய்பவர்கள், கூர்க்கா வேலை செய்பவர்கள், கட்டிட வேலை செய்பவர்கள் என்றெல்லாம் அவர்கள் செய்யும் தொழில்களை அவமானப்படுத்தி மேடையில் பேசினார்.
அமைச்சர் பொன்முடி, வட இந்தியர்கள் தமிழகத் தெருக்களில் பானிபூரி விற்பவர்கள் என்றார். அமைச்சர் மூர்த்தி, வட மாநில வணிகர்களை தமிழகத்தில் தொழில் செய்ய அனுமதிக்கக்கூடாது என்று வெறுப்புணர்வைத் தூண்டினார்.
திமுக கூட்டணிக் கட்சித் தலைவர் திருமாவளவன், “வட மாநில ஆட்களை இறக்குமதி செய்வது அதிகரித்துள்ளது” என்று மிரட்டல் தொனியில் பேசினார்.
அவர் கட்சியான ஈரோடு கிழக்கு மாவட்ட விசிகவினரும், திமுகவின் மற்றொரு கூட்டணிக் கட்சித் தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோரும், “வட மாநிலத் தொழிலாளர்களை வெளியேற்று” என்று போஸ்டர் ஒட்டி போராட்டம் அறிவிக்கிறார்கள். வட இந்திய சகோதரர்கள் மேல் இத்தனை வன்மப் பிரச்சாரம் நடந்தும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இவர்களைக் கண்டித்து ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை.
ஒரு பொறுப்புள்ள முதலமைச்சராக, ஒரு சாரார் மீது தமிழகத்தில் கட்டமைக்கப்பட்ட வெறுப்புப் பிரச்சாரத்தைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சமீபத்தில், ரயிலில் ஒரு வட இந்திய சகோதரர் தாக்கப்பட்ட போதும், சமூக வலைத்தளங்களில் அந்தக் காணொலி பரவிய பின்னர், நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்களே அன்றி, அந்த சம்பவத்தைக் கண்டிக்கவோ, மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவோ முதலமைச்சரோ, மற்ற அமைச்சர்களோ எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
திமுக இத்தனை ஆண்டுகளாக, வட மாநில மக்களுக்கு எதிராகத் தொடர்ந்து செய்து வரும் இது போன்ற வெறுப்புப் பிரச்சாரத்தின் காரணமாக, தற்போது பரவி வரும் போலியான காணொளிகளைக் கூட உண்மையாக இருக்குமோ என்று எண்ணும் அளவுக்கு வட மாநிலங்களில் வசிக்கும் சகோதரர்கள் அச்சத்தில் உள்ளனர். வடமாநில சகோதரர்கள் மேல் தொடர்ந்து நடக்கும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தைக் கடுமையான நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்தி, இந்த அச்சத்தைக் களைவது திமுகவின் பொறுப்பு.
தமிழக பாஜக சார்பாக, கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பாஜகவினர், வடமாநில சகோதரர்களைச் சந்தித்து, இந்த பொய்ப் பிரச்சாரங்களை எடுத்துக் கூறி, அவர்கள் பாதுகாப்புக்கு, தமிழக பாஜக என்றும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதியளித்து வருகின்றனர். இனிமேலாவது, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் , தன் கட்சிக்காரர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிக்காரர்கள், வடமாநில சகோதரர்கள் மேல் தொடரும் வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுத்து, தமிழகத்தின் மாண்பைக் காப்பார் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.