முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் இறந்த நிலையில், இரங்கல் தெரிவிக்க பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மதுரை வந்திருந்தார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, பாஜக வளர்ந்து வருகிறது. தலைவர்களை உருவாக்கி கொண்டிருக்கின்றோம். பாஜகவில் இருந்து யார் வெளியேறினாலும் அவர்களை வாழ்த்தி வழி அனுப்புவேன். ஒரு தலைவன் எப்படி இருக்க வேண்டுமோ, அப்படியே நான் இருப்பேன். சில முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சி அளிக்கத் தான் செய்யும். கட்சி அதிர்வுகளை சந்தித்து கொண்டு தான் இருக்கும். அரசியலில் ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர் வினை உண்டு. இப்போது பார்த்த வினையின் எதிர்வினை இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் நடக்கலாம். அரசியல் கட்சி அப்படித்தான் வளர முடியும். கட்சியில் இருந்து யார் விலகினாலும், பாஜகவின் பலம் குறையாது. மாவட்ட தலைவர்களும் தைரியமாக முடிவெடுக்க வேண்டும். உங்கள் பின்னால் கட்சி இருக்கும். நீங்கள் மேனேஜர் வேலை எங்கும் செய்ய வேண்டாம். பாஜக தமிழகத்தில் அடுத்த கட்டத்துக்கு செல்ல வேண்டும் என்றால், பாஜகவில் தலைவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை மக்களும் ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
தனிநபர் தாக்குதல் நடத்தி விஜயகாந்தை போல் என்னையும் வீழ்த்தி விட முடியாது. நான் பதவிக்காக இங்கு வரவில்லை. ஒரு எம்.எல்.ஏ, எம்.பி பதவியை வாங்கி பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் வரவில்லை. ஐபிஎஸ் பதவியையே தூக்கி வீசிவிட்டு வந்தவன் நான். நான் வந்திருப்பது பாஜகவை ஆட்சி கட்டிலில் அமர வைப்பதற்கு மட்டும் தான். அண்ணாமலை தமிழகத்தில் தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை எனவும் அவர் கூறினார். தலைவர்களாக ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் எத்தகைய முடிவுகளை எடுத்தார்களோ அதைப்போன்ற நானும் முடிவெடுப்பேன் எனவும் அவர் கூறினார். 2026ல் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்றால் இன்னும் வேகமாக செல்ல வேண்டும் என கட்சி நிர்வாகளிடம் தான் கூறி வருவதாகவும் அவர் தெரிவித்தார். வருகின்ற நாட்களில் வேகத்தை கூட்டத்தான் போகிறோமே தவிர குறைக்க போவதில்லை எனத் தெரிவித்த அவர், தன்னை திட்டி விட்டு செல்பவர்கள் மாற்று கட்சிக்கு சென்று வேறொரு தலைவரை புகழத் தான் போகிறார்கள் எனவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டுக்கு சென்ற அவர், அவரது தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது தாயார் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் பாஜக மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்