வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனையால் ஏற்பட்ட பதட்டமான சூழல் தொழிலை தொடர முடியாத நிலைக்கு தள்ளி உள்ளது. இவ்விவகாரத்தை ஆரம்பத்திலேயே தமிழக அரசு சரியாக கையாளவில்லை – வானதி சீனிவாசன்
கோவை மக்கள் சேவை மையம் மற்றும் பாலம்மாள் தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் பெண்களுக்கான இலவச தையல் இயந்திரம் மற்றும் பயிற்சி வகுப்பு தொடக்க விழா இன்று நடைபெற்றது. பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இதில் கலந்து கொண்டு 25 மகளிருக்கு தையல் இயந்திரங்களை வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் பேசியதாவது; கோடிக்கணக்கான சாதாரண மகளிர் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். பெண்களுக்கான அடிப்படை தேவைகள், பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். பெண்கள் தலைமையிலான முன்னேற்றத்திற்காக மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.
மேலும் கோவை தெற்கு தொகுதியில் மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று சுயம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம். சுய வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாட்டிற்காக ஆயிரம் பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி அளித்து, தையல் இயந்திரம் வழங்க உள்ளோம் என்றார் . இதில் முதற்கட்டமாக இன்று 25 பெண்களுக்கு வழங்கியுள்ளோம். 12 இடங்களில் இந்த மையம் துவங்கப்பட உள்ளது. அதேசமயம் மகளிரணி சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளோம் எனத் தெரிவித்தார்.
வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனையால் ஏற்பட்ட பதட்டமான சூழல் தொழிலை தொடர முடியாத நிலைக்கு தள்ளி உள்ளது. இவ்விவகாரத்தை ஆரம்பத்திலேயே தமிழக அரசு சரியாக கையாளவில்லை. அதனால் தான் இது மிகப்பெரிய பூதமாக மாறியிருக்கிறது. ஆராம்பத்திலேயே புலம் பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இருந்தால், இந்த நிலை வந்திருக்காது என்றார்.
திமுக ஆட்சியை கவிழ்க்க மற்றவர்கள் சதி செய்ய வேண்டியதில்லை. அதற்கு அவர்களே தகுதியானவர்கள். எதிர்கட்சிகளை பார்த்து முதலமைச்சர் பயப்பட வேண்டாம். அமைச்சர்கள், குடும்பத்தை பார்த்து தான் பயப்பட வேண்டும் எனக் கூறினார்.