தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் பாஜக மாவட்ட அலுவலகங்களை திறந்து வைக்கும் நிகழ்ச்சி கிருஷ்ணகிரியில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா வருகை தந்தார். அவருக்கு பாஜக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி அலுவலகத்தை நேரில் திறந்து வைத்த நட்டா, மற்ற அலுவலகங்களை காணொலி மூலம் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாஜக தலைவர்கள் பேசினர். அப்போது பேசிய மாநில தலைவர் அண்ணாமலை, பாஜக மற்ற கட்சிகளை போல அல்லாமல், வித்தியாசமான கட்சி எனக் கூறினார். இந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டி அவர் பேசியதாவது; பாஜகவை நாம் ஏன் வித்தியாசமான கட்சி (Party With Difference) என சொல்கிறோம் என்றால், கிருஷ்ணகிரி மாவட்ட அலுவலகத்தை தலைவர் நட்டா திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த இருக்கையில் மாவட்ட தலைவர் சிவபிரகாஷை அமர வைத்து அருகில் நின்றார். இதேபோல கடந்த முறை மேட்டுப்பாளையத்தில் பூத் ஆய்வுக்கா நட்டா வருகை தந்திருந்தார். அப்போது அந்த பூத் தலைவரை இருக்கையில் அமரவைத்து அருகில் நின்றார்.
இதுபோன்ற காட்சிகள் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளில் காண முடியுமா எனக் கேள்வி எழுப்பிய அவர், அதனால் தான் பாஜகவை வித்தியாசமான கட்சி என தாம் குறிப்பிடுவதாக தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த தேசிய தலைவர் நட்டாவை வரவேற்று நன்றி நட்டா என்ற ஹேஷ்டேக் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களால் டிவிட் செய்யப்பட்டு இந்திய அளவில் முதலிடத்தில் இருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்