இந்தியா எப்போதும் இந்து நாடாகவே உள்ளதாக ஆர்எஸ்எஸ் தேசிய பொது செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே தெரிவித்துள்ளார்.
ஹரியானாவில் கடந்த 3 நாட்களாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா எனப்படும் ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் மற்றும் பொது செயலாளர் தத்தாத்ரேயே ஹொசபலே ஆகியோர் குத்துவிளக்கேற்றி மாநாட்டை துவக்கி வைத்தனர்
மூன்று நாள் மாநாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வளர்ச்சி குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த தத்தாத்ரேய ஹொசபலே, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது இந்தியா ஏற்கனவே இந்து நாடாகவே உள்ளதாக குறிப்பிட்டார். மேலும் புதிதாக இந்து நாட்டை உருவாக்க தேவையில்லை எனவும் அவர் கூறினார்.
நாடு என்பது கலாச்சாரத்தை அடிப்படையாக கொண்டது எனத் தெரிவித்தார். ஆர்.எஸ்.எஸ் குறித்த ராகுல்காந்தியின் கருத்துக்கு பதிலளித்த அவர் ராகுல்காந்தி மிகவும் பொறுப்புடன் பேச வேண்டும். சமுதாயம் ஆர்எஸ்எஸ்சை எந்த அளவுக்கு ஏற்று கொண்டுள்ளது என்பதை உணர வேண்டும் எனவும் கூறினார்
மேலும் இந்து சமுதாயத்தை பொறுத்தவரை திருமணம் என்பது கலாச்சாரத்தின் ஒரு பகுதி எனவும் அவர் கூறினார். ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம் தொடர்பான வழக்கில் மத்திய அரசின் கருத்தை ஆதரிப்பதாகவும் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் தேசத்தின் மறுமலர்ச்சிக்கும் தடையாக இருக்ககூடிய அனைத்து தடைகளையும் அகற்ற ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் தொடர்ந்து பாடுபடும் என வலியுறுத்தினார். மேலும் தீண்டாமை சமூகத்திற்கு அவமானம் என்றும், அதை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செயல்பட்டு வருவதகவும் தெரிவித்தார்.