திருச்சி மாவட்டத்தில் மாநகர், புறநகர்ப் பகுதிகளில் முடிவடைந்த பல திட்டங்களை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்கும் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எஸ்.பி.ஐ காலனியில் அமைக்கப்பட்டிருந்த டென்னிஸ் அரங்கை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். இந்நிலையில் டென்னிஸ் அரங்கு கல்வெட்டியில் திருச்சி சிவா பெயர் இல்லை எனக் கூறி, அவரது ஆதரவாளர்கள் கே.என் நேருக்கு எதிராக முழக்கமிட்டனர். விழா முடிந்து வெளியே வந்த கே.என்.நேருவிற்கு எதிராக கோஷமிட்டும், கருப்பு கோடி காட்டியும் அமைச்சரின் காரை வழிமறித்து தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இதனால் பொங்கி எழுந்த கே.என். நேருவின் ஆதரவாளர்கள் திருச்சி மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்துச்செல்வம், காஜாமலை, விஜய் உட்பட 10 பேர், திமுக எம்.பி சிவா வீட்டிற்கு வந்து, கார்,பைக் மற்றும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.
இதனால் அப்பகுதியே போர்க்களமாக மாறிய நிலையில் காவல்துறையினர் எத்தகைய நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே கருப்பு கொடி காட்டிய திருச்சி சிவா ஆதரவாளர்களை காவல்துறையினர் கைது செய்து வைத்திருந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் அத்துமீறி காவல்நிலையத்துக்குள் நுழைந்து அவர்களை தாக்கினர். அவர்களை தடுத்து நிறுத்த முயன்ற பெண் காவலரை தள்ளிவிட்டதால் அவரின் கை முறிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சியை பொறுத்தவரை திமுகவில் சிவாவை வளரவிடாமல் கே.என் நேரு தொடர்ந்து அரசியல் ரீதியாக அழுத்தம் தந்து வருவதாக நீண்ட நாட்களாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இந்த நிலையில் திருச்சி சிவாவின் ஆதரவாளர்கள் மற்றும் அவரது வீடு மீது மீண்டும் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
திமுகவின் மேலிடத்தில் திருச்சி சிவாவை விட செல்வாக்கு மிக்கவராக கே.என் நேரு இருப்பதால், அடியையும் வாங்கிவிட்டு பணிந்து செல்ல வேண்டிய சூழலில் சிவாவின் ஆதரவாளர்கள் உள்ளனர்.