அண்மையில் லண்டனுக்கு சுற்றுலா சென்றிருந்த ராகுல்காந்தி இந்திய மண்ணில் ஜனநாயகம் சிதைந்து விட்டதாகவும், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா இதில் தலையிட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், அவர் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ராகுல்காந்தியை கண்டித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பேசியதாவது; உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில், ஜி-20 நாடுகளின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், ராகுல்காந்தி அந்நிய மண்ணில் தேசத்தையும், நாடாளுமன்றத்தையும் அவமானப்படுத்தியுள்ளார். வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஜனநாயகம் முடிவுக்கு வந்துள்ளதாகவும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா நிச்சயம் இதில் தலையிட வேண்டும் என்றும் பேசியுள்ளார். அவரது பேச்சு தேச விரோதிகளை பலப்படுத்தியுள்ளது. அவர் மக்களால் வாக்களிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கத்தையும், 130 கோடி மக்களையும் அவமானப்படுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தற்போது தேசிய விரோத நடவடிக்கைகளின் அங்கமாக மாறியுள்ளது. ராகுல்காந்தி தேச விரோத சக்திகளின் டூல்கிட்டில் நிரந்தமாக இடம்பெற்றுள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, மிக கடினமான காலகட்டங்களை சந்தித்த போதும் கூட, எந்த ஒரு இந்திய தலைவரும் வெளிநாட்டு சக்திகளிடம் சென்று இந்தியாவுக்கு எதிராக செயல்படுமாறு வலியுறுத்தியதில்லை. இந்திய வரலாற்றில் இது மிகவும் ஆபத்தான விஷயமாகும். இதற்காக ராகுல்காந்தி நிச்சயம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
ஜார்ஜ் சோரசும், ராகுல்காந்தியும் ஏன் ஒருமித்த குரலில் பேசுகின்றனர். ஏன் காங்கிரஸ் கட்சியின் பேச்சும் ராகுல்காந்தியின் பேச்சும் ஒரே மாதிரியாக இருக்கிறது ?. இத்தாலி பிரதமர் உலகிலேயே மிகவும் அன்பானவர் பிரதமர் மோடி எனக் குறிப்பிட்டுள்ளார். உலக வங்கி முதல் சர்வதேச நிதியம் வரை இந்தியாவின் வளர்ச்சியை பாராட்டியுள்ளனர். ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி உள்ளிட்ட நாடுகளும் பிரதமர் மோடியின் தலைமையை பாராட்டியுள்ளன. அதேசமயம் ராகுல் காந்தி நாட்டை அவமதித்துள்ளார்.
உலகில் இந்தியா தான் ஜனநாயகத்தின் தாய். இந்தியாவின் ஜனநாயக மரபுக்கு உலகின் எந்த நாட்டினாலும் தீங்கு விளைவிக்க முடியாது. இன்று காங்கிரசின் குரலை இந்தியாவில் யாரும் கவனிக்கவில்லை, பொதுமக்கள் உங்களை நம்பவில்லை. இதனால் உங்களது கட்சி இந்தியாவில் இருந்து கிட்டத்தட்ட துடைத்தெரியப்பட்டு விட்டது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வேறு நாடுகள் தலையிட கூறும் ராகுல்காந்தியே உங்களது உள்நோக்கம் என்ன ? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே வெளிநாடுகளில் இந்திய ஜனநாயகத்துக்கு எதிராக பேசிய ராகுல்காந்தியை, நாடாளுமன்ற கூட்டத் தொடர் முழுவதும் நீக்க வேண்டுமென பாஜக எம்பிக்கள் சபாநாயகரிடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர். இந்த மனு மீது சபாநாயகர் இன்று முடிவெடுக்க உள்ளார்.