திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்டால், “நான் கலைஞரின் மகன்” ஆயிரம் விளக்கம் சொல்வார். ஆனால் நடப்பதையெல்லாம் பார்த்தால் திராவிட மாடலுக்கு சரியான விளக்கம் குழப்பம் ஏற்படுத்தி அனைத்து அரசு துறைகளின் கதையை முடிக்கும் மாடல் என்று எண்ணத் தோன்றுகிறது. அப்படியொரு சம்பவம் தான் ஆவினிலும் நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களில் ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 37 லட்சத்தில் இருந்து 27 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ஆவினின் பால் சரிவர விநியோகிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதற்கு பதிலளித்த அத்துறையின் அமைச்சர் நாசர், ஆவின் பாலை வண்டிகளில் ஏற்றி விநியோகம் செய்யும் வட இந்திய தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதால் தான் விநியோகம் தடைபட்டுள்ளதாக தெரிவித்தார். அப்படியென்றால் பால் உற்பத்தி செய்யப்பட்டு ஆலைகளில் உள்ளதா என்றால் அதுவும் இல்லை. இதன்பின்னர் தான் ஆவின் பால் கொள்முதல் 37 லட்சம் லிட்டரில் இருந்து 27 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது தெரியவந்தது.
இதற்கு முக்கிய காரணம் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தி தரவில்லை என குற்றம்சாட்டும் பால் உற்பத்தியாளர்கள் லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தி தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு திராவிட மாடல் செவிசாய்க்காததால் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கிராம சங்கங்கள் வழியாக ஆவினுக்கு பால் வழங்குவதை நிறுத்தியுள்ளனர். இதனால் நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டர் பால் கொள்முதல் குறைந்துள்ளது.
இந்நிலையில் தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஆட்சிக்கு வந்தவுடன், பால் மற்றும் பால் பொருட்கள் விலையை தொடர்ச்சியாக உயர்த்திய திறனற்ற திமுக அரசு, ‘பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்’ என்ற உற்பத்தியாளர்கள் கோரிக்கைக்கு மட்டும் செவி சாய்க்காமல் இருப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.