கன்யாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறை, விவேகானந்தா கேந்திரத்தை பார்வையிட்ட குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மறைந்த ஏக்நாத் ரானடேவின் மகத்துவத்தைக் கண்டு வியப்பதாக பெருமிதம்
மூன்று நாள் பயணமாக தென்னிந்தியாவுக்கு வருகை தந்துள்ள குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வந்த அவரை ஆளுநர், ஆர்.என். ரவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இதனை தொடர்ந்து கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு படகில் சென்ற அவர் அங்கு வழிபாடு நடத்தினார்.
பின் விவேகானந்த கேந்திரத்தில் அமைந்துள்ள ராமாயண காவியத்தையும் பார்வையிட்டு, தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது: ‘’விவேகானந்தர் பாறை, நினைவிடத்திற்குச் சென்றது எனக்கு மறக்க முடியாத அனுபவம். ஆன்மிகம் நிறைந்த வளாகத்தைக் கட்டுவதற்குப் பின்னால் இருந்த மறைந்த ஏக்நாத் ரானடே ஜியின் மகத்துவத்தைக் கண்டு வியக்கிறேன்’.
’சுவாமி விவேகானந்தரின் மகத்தான பணியை இந்த இடத்தில் உணர்ந்ததை நான் பாக்கியமாக உணர்கிறேன். விவேகானந்த கேந்திரத்தின் செயல்பாடுகள் மற்றும் சுவாமிஜியின் செய்தியைப் பரப்பும் மக்களின் பக்தியையும் பாராட்டுகிறேன்’ என பதிவிட்டிருந்தார்.