ஆண்டுக்கு 14 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற வாக்குறுதி என்ன ஆனது: அண்ணாமலை விமர்சனம்

ஆண்டுக்கு 10 லட்சம் தனியார், 3.5 லட்சம் அரசு வேலைவாய்ப்பு என்று வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு TNPSC தேர்வு முடிவைக் கூட வெளியிட முடியாத திறனற்ற திமுக அரசு இளைஞர்களை ஏமாற்றி வருகிறது. என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்ச்சித்துள்ளார்.

இது சம்மந்தமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அளித்த அறிக்கையில் தெரிவித்ததாவது: “நிறைவேற்றாமல் பல வாக்குறுதிகள் காத்திருக்க, 2023-2024 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. மத்திய அரசின் பல திட்டங்களுக்கு புதிய தமிழ் பெயர்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் சூட்டப்பட்டுள்ளது.

மேலும் ‘தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம்’ என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த மூன்று வருடங்களில் தமிழகத்தின் மொத்த கடன் சுமையை ரூ.7,26,028 கோடிக்கு எடுத்து சென்று மாபெரும் சாதனையை திறனற்ற திமுக அரசு புரியவுள்ளது. இதில் விஷயம் என்னவென்றால், தமிழகத்தின் மொத்த கடன்தொகை நமது நாட்டின் தற்போதைய வெளிக்கடனை விட அதிகம்.

ஆட்சிக்கு வந்து 2 வருடங்களுக்குப் பிறகு, ‘மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி திமுகவுக்கு ஞாபகம் வந்ததில் மகிழ்ச்சி. வரும் செப்டம்பர் மாதம் இந்த தொகை வழங்கப்படும்போது, முதல் தவணையில் இருந்து இதுவரையிலான 28 மாத நிலுவைத் தொகையுடன் சேர்த்து, 29,000 ரூபாயாக வழங்க வேண்டும்.

அதோடு ‘தகுதியுடைய மகளிருக்கே ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்’ என்று மடைமாற்றாமல், திமுக தனது தேர்தல் வாக்குறுதியான ‘அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும்’ என்று கூறியதை நினைவில் கொண்டு தமிழகத்தில் உள்ள 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தேவையான நிதி குறித்து எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை. சிதிலமடைந்து இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் மேம்பாடு குறித்தும் எந்த அறிவிப்பும் இல்லை. புதிதாக கட்டிடங்கள் கட்டுவதில் முனைப்புடன் இருக்கும் அரசு தற்போதுள்ள உள்கட்டமைப்பை பராமரிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி சரியாக செலவிடப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வியறிவும் எண் கணித திறனும் உயர கொண்டுவரப்பட்ட இத்திட்டம் பயனளிக்கிறதா என்று அரசு ஆராய்ந்து தேவையான மாற்றங்களை கொண்டுவர வேண்டும். 2022ம் ஆண்டுக்கான ASER அறிக்கையின் படி தமிழகத்தில் மூன்றாம் மற்றும் ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளியில் சேர்க்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் அரசு, அங்கு பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த அறிவிப்புகள் மட்டும் போதாது என்பதை உணர்ந்து பத்தாயிரத்திற்கு மேற்பட்ட சிதிலமடைந்து கிடக்கும் பள்ளி கட்டிடங்களை சரி செய்ய போதிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை, வனத்துறை போன்ற பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து பள்ளிகளும் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் கொண்டு வரப்படும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகள் பக்தர்களின் நன்கொடையில் கட்டப்பட்டவையாகும். அதை பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு செல்வது தமிழக அரசின் அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது என்பதை தமிழக முதல்வர் உணர்ந்து, இது போன்ற வீண் முயற்சிகளை கைவிட வேண்டும்.

தொழில் சார்ந்த திறன் பயிற்சிகள் குறித்து விவரித்த நிதிநிலை அறிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி விட்டதா ? என்பதை குறிப்பிட தவறிவிட்டது. ‘ஆண்டுக்கு 10 லட்சம் தனியார் வேலைவாய்ப்பு மற்றும் 3.5 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்’ என்று தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்துவிட்டு TNPSC தேர்வு முடிவுகளை கூட வெளியிட முடியாமல் இளைஞர்களை ஏமாற்றி வருகிறது திறனற்ற திமுக அரசு.

திமுக ஆட்சிக்கு வந்தப்பின் புதிதாக 21 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கட்டப்படும் என்று அறிவித்திருந்தனர். 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 11 கல்லூரிகளுக்கு நிலம் கூட கையகப்படுத்தவில்லை என்ற செய்தி தகவல் அறியும் உரிமை சட்டம் மூலமாக தெரிய வந்துள்ளது. மீதமுள்ள 10 கல்லூரிகளுக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. ஆனால், இந்த 21 கல்லூரிகளுக்கு தேவையான கட்டுமான மற்றும் உள்கட்டமைப்பு செலவினங்கள் குறித்து 2023-24 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் இடம் பெறவில்லையே ஏன்? புதிய கல்லூரிகள் கட்டுவதற்கான திட்டம் கைவிடப்பட்டதா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும்.

சென்னையில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரத்தை அமைப்போம் என்று அறிவித்து அதற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்பதே திறனற்ற திமுகவின் நிதிநிலை அறிக்கையின் சிறப்பு அம்சம். நிதிநிலை அறிக்கையில் உள்ள பல அறிவிப்புகள் இவ்வாறே உள்ளன. தமிழக பாரதிய ஜனதா கட்சியின் கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத்திட்டம் செவ்வனே செயல்படுத்தப்படுவதை உறுதி செய்ய தனி சட்டம் இயற்றப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். காலம் தாழ்த்தாமல் இந்த சட்ட முன்வடிவை இயற்றவேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறோம்.

‘கோவில்களின் புனரமைப்புக்கு 1000 கோடி ரூபாய் செலவிடப்படும்’ என்ற தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது? கடந்த இரண்டு ஆண்டுகளில் செலவேதும் செய்யாமல் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கோவில் புனரமைக்க நிதி ஒதுக்கீடு ஏதும் இடம் பெறவில்லை. என அறிக்கையில் தெரிவித்துள்ளார்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top