தென்காசியில் இன்று நடந்து கொண்டிருப்பது ஒரு சரித்திரம். மழை, குளிரை பொருட்படுத்தாமல் குழந்தைகளுடன் பெண்கள் வந்திருக்கிறார்கள். 2 மணி நேரத்துக்கும் மேலாக மழையில் நனைந்தபடி அமர்ந்திருக்கிறார்கள். இதன் மூலம் மாற்றம் நடந்து விட்டது – அண்ணாமலை
தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் தென்காசி இசக்கி மஹால் வளாகத்தில் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் கே. ஏ. ராஜேஷ் ராஜா தலைமை தாங்கி வரவேற்று பேசினார். மாநில பொதுச்செயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட பொதுச்செயலாளர்கள் பாலகுருநாதன், ராமநாதன், அருள்செல்வன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்திற்காக பிரமாண்டமான ஏற்பாடுகளை செய்திருந்த நிலையில் காலையில் இருந்து மழை கொட்டியதால் தொண்டர்கள் சிரமமடைந்தனர். எனினும் சிரமத்தையும் கருதாமல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தலைவர் அண்ணாமலையின் வருகைக்காக காத்திருந்தனர். அந்தக் கூட்டம் ஒரு மக்கள் கடலாகவே காட்சியளித்தது. அண்ணாமலை மேடை ஏறியபோது தொண்டர்கள் அனைவரும் ஆர்ப்பரித்தனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் அண்ணாமலை, 40,50 ஆண்டுகளாக பாஜகவின் உழைப்பு, தமிழகத்தில் தனி முத்திரையை பதிக்க வேண்டும் என்ற ஏக்கம் ஈடேறும் காலம் வந்து விட்டது. இந்தியா முழுவதும் பாஜக வந்து கொண்டிருக்கிறது. வரமுடியாது என்று சொன்ன மாநிலங்களில் கூட பாஜக ஆட்சியில் அமர்ந்து இருக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில் 2 முறை ஆட்சி அமைத்திருக்கிறோம். 50 சதவீதத்துக்கும் மேல் கிறிஸ்தவர்கள் உள்ள பகுதியில் ஆட்சி அமைக்க முடியாது என்று தெரிவித்தார்கள். அதிலும் பாஜக ஆட்சி அமைத்திருக்கிறது.
நடத்திகாட்ட முடியாது என்று சொன்னால் அதனை பாஜக தொண்டர்கள் நடத்தி காட்டுவார்கள். தென்காசியில் இன்று நடந்து கொண்டிருப்பது ஒரு சரித்திரம். மழை, குளிரை பொருட்படுத்தாமல் குழந்தைகளுடன் பெண்கள் வந்திருக்கிறார்கள். 2 மணி நேரத்துக்கும் மேலாக மழையில் நனைந்தபடி அமர்ந்திருக்கிறார்கள். இதன் மூலம் மாற்றம் நடந்து விட்டது என்பதை பார்த்து கொண்டிருக்கிறோம். பிரதமர் மோடி நவம்பர்-19ம் தேதி காசி தமிழ் சங்கமத்தில் தென்காசியை பற்றி பேசினார். தென்காசியை சேர்ந்த மன்னர் அதிவீரராம பாண்டியன், காசியில் இருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்து தென்காசியை தோற்றுவித்தார். தென்காசி என்ற பெயரே தேசிய ஒருமைப்பாட்டை காட்டுகிறது. 2024ல் தென்காசியில் இருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் டெல்லிக்கு செல்ல வேண்டும்.
தமிழகத்தில் இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை. நாடு பிரச்சனைக்கு செல்லும் போதெல்லாம் ஒரு தலைவரை அடையாளம் கண்டுபிடித்து கொண்டிருக்கிறது. அப்படித்தான் 2014ம் ஆண்டு மோடி இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கபட்டார். இந்த மண்ணுக்கு ஒரு பிரச்சனை வந்தால் அந்த மண்ணே ஒரு தலைவரை கண்டுபிடிக்கும். அதற்கான காலமும் வந்துவிட்டது. இவ்வாறு அவர் பேசினார்.