விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் இப்ராஹீம். நேற்று மாலை இவர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கு கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள், பெண் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்ட இப்ராகிம் அவர்கள் இருவரையும் கண்டித்துள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இருவரும் இப்ராகிமை சரமாரியாக குத்தி கொலை செய்தனர். இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இன்று சட்டப்பேரவையில் விவாதப் பொருளாக மாறியது.
அதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், குடும்பத் தகராறில் இந்த கொலை நடைபெற்றதாக விளக்கம் அளித்தார்.
ஆனால் சிசிடிவி கேமராவில் இடம்பெற்ற காட்சிகள் மற்றும் புலன்விசாரணை அடிப்படையில், குத்தி கொலை செய்த இளைஞர்களின் பெயர் ராஜசேகர் மற்றும் வல்லரசு என்பதும், இப்ராகிமுக்கும் அவர்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் கஞ்சா போதையில் இருந்த இளைஞர்கள் ஸ்டாலின் படம் பொறித்த டீசர்ட்டை அணிந்து வந்து கொலை சம்பவத்தை அரங்கேற்றியதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ஆட்சியில் உள்ள மிதப்பில் திமுகவினர் ஈடுபடும் கொலை உள்ளிட்ட குற்றங்களை குடும்பச் சண்டை என்று முதல்வர் கடந்து செல்ல முடியாது.
அந்த ரவுடிகள் இருவரும் இன்னொரு கடையிலும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதுகாப்புமில்லாமல் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும். கட்டுப்பாடின்றி அராஜகங்களை செய்து வரும் திமுகவினரை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும் என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.