ஒரு குறிப்பிட்ட கொள்கையை தீவிரமாக கடைபிடித்தார் என்பதற்காக, ஒரு சுதந்திர போராட்ட வீரனை, சுதந்திரத்திற்காக யாருமே கொடுக்காத விலையை கொடுத்த தலைவனை இகழும் போக்கு நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது. காங். முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் நான் ஒன்றும் சாவர்க்கரை போல கோழை அல்ல என்று தனது வீரத்தை புகழ்ந்து பேசியுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த இன்னும் சிலர் அவரது சாதியை குறிப்பிட்டு விமர்சிக்கின்றனர். இந்நிலையில் சாவர்க்கருடைய வரலாற்றை மீண்டும் ஒருமுறை புரட்டிப் பார்ப்பதற்காக இந்த கட்டுரை
அந்தமான் சிறையின் கொடூரம்
வீர்சாவர்க்கர் என்ன மாதிரியான கொடூர தண்டனைகளுக்கெல்லாம் உள்ளாக்கப்பட்டார் என்பதை முதலில் பார்ப்போம். இந்தியாவில் எதிர்த்தரப்பு வாதத்தைக் கேட்காமலேயே சாவர்க்கருக்கு 50 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்து, அந்தமான் செல்லுலர் சிறையில் தள்ளியது ஆங்கிலேய அரசு. வீர சாவர்க்கரை அணுஅணுவாகச் சித்ரவதை செய்வதற்கென்றே டேவிட் பார்ரி என்ற ஜெயில் வார்டனை ஏற்பாடு செய்தது.
மற்ற சிறைக் கைதிகளுக்குக் கைகளிலும் கால்களிலும்தான் விலங்கு. ஆனால், சாவர்க்கருக்குக் கழுத்தைச் சுற்றி ஒரு சங்கிலி புறப்பட்டு (ஸ்டெதாஸ்கோப்பைத் தலைகீழாகக் கவிழ்த்தது போல்) இரண்டு கால்களிலும் பூட்டப்பட்டிருக்கும். செல்லுலர் சிறை சைக்கிள் சக்கரத்திலுள்ள கம்பிகள் போல் கட்டப்பட்டிருந்தது. ஓர் அறையில் இருக்கும் கைதி, இன்னொரு கைதியைப் பார்க்க முடியாது. சாவர்க்கருக்கு மூன்றாவது மாடியில் அறை எண் 7 ஒதுக்கப்பட்டது. அந்த அறையில் இருக்கும் கைதிதான் நாளும் தூக்கில் போடப்படும் கைதிகளை நேரடியாகப் பார்க்க முடியும்.
தூக்குப் போடப்படும் அறையில் மூன்று தூக்குக் கயிறுகள் தொங்கிக் கொண்டேயிருக்கும். தினமும் தூக்கில் போடப்படும் கைதிகளைப் பார்த்துப் பார்த்தே, சாவர்க்கர் மனநோயாளியாக வேண்டும் என்பது டேவிட் பார்ரியின் இலக்கு. ஆனால், ஒரு கைதி தூக்கிலிடப்படும்போது அந்தக் கோரக் காட்சியைக் காணும் சாவர்க்கர், பாரத மாதா கி ஜே, இன்குலாப் ஜிந்தாபாத் என முழக்கமிடுவார். சாவர்க்கரின் குரல் ஒலித்தால், ஒரு போராளி தூக்கிலிடப்பட்டார் என மற்ற போராளிகள் உணர்ந்து கொள்வர்.
அந்தக் குரலைக் கேட்டவுடன் சிறையின் 698 அறைகளிலிருந்தும் அதே கர்ஜனை கம்பீரமாக ஒலிக்கும். உடனே, டேவிட் பார்ரி, சாவர்க்கரின் அறைக்கு வந்து கையாலும், காலாலும் காட்டுமிராண்டித்தனத்தைக் காட்டிவிட்டுப் போவான்.
விடுதலைப் போராட்ட வீரர்கள் ஒரு நாளில் 2 முறைகள்தாம் இயற்கைக் கடன்களைக் கழிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு அறையிலும் இரண்டு பானைகள் வைக்கப்பட்டிருக்கும். ஒன்று, குடிதண்ணீருக்காக. மற்றொன்று, இயற்கைக் கடன்களைக் கழிப்பதற்காக. கொடுக்கப்பட்ட பணிகளிலேயே கடுமையான, கொடுமையான பணி செக்கிழுத்து எண்ணெய் ஆட்டுதல். கனமான செக்கு என்பதால், மார்பைச் சுற்றி ஒரு பக்கக் கயிறும் செக்கின் சக்கரத்தைச் சுற்றி மறு பக்கக் கயிறும் இருக்குமாறு அமைத்துக் கொண்டு செக்கைச் சுழற்ற வேண்டும்.
அதில் ஒரு நாளைக்குள் 30 பவுண்டு எண்ணெய் ஆட்டாவிட்டால், அந்தப் போராளிகள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவர்.
சிறையில் எழுதிய மரணசாசனம்
இத்தனை அராஜகங்களையும் தாங்கிக்கொண்டு வீர சாவர்க்கர் தம் அண்ணிக்கு மரணசாசனம் என்னும் தலைப்பில் எழுதிய கடிதம் இமயமலையில் செதுக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
அக்கடிதம் வருமாறு: நான் இறந்து, எனது சவம் எரிக்கப்பட்டு அந்தச் சாம்பல் அந்தமானின் துக்க ஓடையில், துயரமாகிற கண்ணீரால் அடித்துக்கொண்டு போகிறபோது பயங்கர நாவுகொண்டு பேசினாலும் சரி அல்லது கங்கையின் புனிதப் பளிங்கு நீரோடையில் நடுநிசியில் நட்சத்திர கணங்கள் செய்கிற நர்த்தனங்களோடு கொஞ்சிக் குலவினாலும் சரி, எனக்கு இரண்டும் ஒன்றுதான்..! இந்நிலையில் சாவர்க்கர் தன்னை விடுவிக்க ஆங்கில அரசுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் என்பது வா உ சிதம்பரனாரின் பணத்தை காந்தி திருடிக் கொண்டார் என்பது போன்ற, வெட்ட வெட்ட வாழை துளிர்ப்பது போல, எத்தனை முறை ஆதாரங்களுடன் மறுத்தாலும், மீண்டும் மீண்டும் திட்டமிட்டே பரப்பப்படும் ஓர் இமாலயப் புளுகு.
பஞ்சம் தின்று வளர்ந்தவர்
அந்தமான் சிறையில் 14 ஆண்டுகள் சிறைவாசமும் ரத்தினகிரியில் 14 ஆண்டுகள் அஞ்ஞாதவாசமும் செய்த சாவர்க்கர், 1963- ஆம் ஆண்டு மும்பையில் நோய்ப்படுக்கையில் விழுந்தார். மருத்துவர்கள் கொடுத்த மருந்தை அருந்த மறுத்தார்; உணவும் உட்கொள்ள மறுத்தார். நான் வந்த வேலை முடிந்துவிட்டது.. இனி இந்த உலகில் இருப்பது நியாயமில்லை எனக் கூறி, 22 நாள்கள் உண்ணாநோன்பிருந்து 26. 02.1966 அன்று இறையடி எய்தினார்.
ரோஜாவுக்கு முட்கள் இருக்கின்றன என்பதால், அதனை யாரும் சுவாசிக்கத் தவறுவதில்லை; நீருக்கு நுரையுண்டு என்பதால், அதனை யாரும் நேசிக்கத் தவறுவதில்லை. ஆனால், வாழ்நாள் முழுமையும் நாட்டு விடுதலைக்காகத் தியாகத் தழும்புகளை ஏந்திய மாவீரன் சாவர்க்கர், கடைசிக் காலத்தில் இந்த மண்ணின் மதத்தைத் தீவிரமாக ஆதரித்ததாலும், மகாத்மா காந்தியடிகளின் கொலையோடு சம்பந்தப்படுத்தி வழக்குப் பதிவு செய்யப்பட்டமையாலும், அவருடைய உச்சி முதல் உள்ளங்கால் வரை தழும்பேறிக் கிடக்கின்ற வீர வரலாற்றைப் படிக்க மறுக்கின்றனர்; பரிசீலிக்கத் தவறுகின்றனர்.
வீர சாவர்க்கு இத்தனை அராஜகங்களையும் செய்த டேவிட் பார்ரியின் கதி என்ன தெரியுமா? பணியில் இருக்கும்போதே முழங்காலுக்குக் கீழே இரண்டு கணுக்கால்களும் செயலிழந்தன. எவ்வளவோ சிகிச்சைகள் செய்தும் பலனில்லாமல் போகவே, கடைசியாக அவனை அயர்லாந்துக்கே அழைத்துக் கொண்டு போவதாக முடிவெடுத்தனர்.. கப்பலில் பயணிக்கும்போதே நோய் முற்றி, இயற்கை எய்தினான் டேவிட் பார்ரி. இறந்த நாளிலிருந்து அயர்லாந்து செல்வதற்குப் பல நாள்கள் ஆகும் என்பதால், அவனுடைய பிணத்தைச் சாக்குமூட்டையில் கற்களுக்கு இடையே கிடத்திக் கடலில் வீசி எறிந்தனர்..
நன்றி: Jrkrish Jayakumar