சென்னை எம்.ஆர்.சி நகர் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி அரங்கில், இலக்கியத்துறையில் வழங்கப்படும் ’சரஸ்வதி சம்மான் விருது’ பெற்றுள்ள எழுத்தாளர் சிவசங்கரிக்கு, பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், எழுத்தாளருக்குக் கிடைக்கக் கூடிய விருது வழங்கும் விழா, பண்டிகை போலக் கொண்டாட வேண்டிய விஷயம்.
திருக்குறள், புறநானூறு, சிலப்பதிகாரம் என பேசும் போது அந்த வார்த்தைக்கு உரிய பலமும் சக்தியும் உள்ளது. இன்றும் அந்த எண்ணத்தில் சக்தியும், சிந்தனையும் மதிப்பும் இருக்கத்தான் செய்கிறது. அது பழங்காலம் என்று ஒதுக்கி வைப்பதில்லை. புத்தகத்தைப் படிக்கப் படிக்க நம்மைப் பற்றி நாமே யோசிப்போம். புத்தகம் என்பது ஒரு கண்ணாடி. நம்மை நாமே அதில் பார்க்கிறோம்.
மனிதன் மாறவில்லை. அப்போது உள்ள குணம் இப்போதும் உள்ளது. சீர்திருத்தம் வருகிறது. மீண்டும் குற்றம் நடக்கிறது. சிலவற்றை கற்றுக் கொள்கிறோம். சிலவற்றை விட்டு விடுகிறோம். ஆயிரம் மனிதர்கள் ஒன்று போல் இருந்தால், ஒருவர் மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கிறார்கள் என்று ஒரு எழுத்தாளர் அதை உள்வாங்கி எழுதுகிறார்.
கணியன் பூங்குன்றனார் ”யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று சொன்னதை தான் பிரதமர் பின்பற்றுகிறார். இந்த வாசகம் தான் ஜி-20 லோகோவில் வசுதெய்வ குடும்பகம் எனவும் ஒன் எர்த் ஒன் பேமிலி ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது
சிறியோர்களை இகழ்வாக பார்க்க வேண்டாம்.பெரியவர்களை பார்த்து பயப்பட வேண்டாம். நடுநிலையாக இருங்கள் என்று பேசினார். முன்னதாக நிகழ்ச்சியில் பாரதியாரின் வாழிய செந்தமிழ் என்ற பாரதியாரின் பாடலை குழந்தைகள் படித்து காட்டினர். இதனை குறிப்பிட்டு பேசியர் அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாரதியின் ஒவ்வொரு எழுத்தும் அணுகுண்டை போன்றது. மனதில் உத்வேகத்தையும் எழுச்சியையும் கொடுக்கும். இன்று குழந்தைகள் பாடிய பாரதி பாடம் எனக்கு மிகுந்த ஆற்றலை அளித்தது. இவ்வாறு அவர் பேசினார்.