மோடி என்ற சமுதாயம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிபோனது. இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி இன்று சூரத் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியதுடன், ஏப்ரல்-14ம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்துள்ளது.
இதனிடையே ராகுல்காந்தி ஒட்டுமொத்த காங்கிரஸ் கூட்டத்தையும் கூட்டி கொண்டு சூரத் நீதிமன்றம் சென்றது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. சட்டீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் . மற்றும் இமாச்சல் மாநில முதலமைச்சர் சுக்வீந்தர் சிங் சுகு ஆகியோர் மற்றும் பிற காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல்காந்திக்கு ஆதரவாக சூரத் சென்றனர்.
காங்கிரசின் இந்த செயல் பல்வேறு தரப்பினரின் விமர்சனங்களை சந்தித்துள்ளது. குறிப்பாக ஒரு மேல்முறையீட்டு மனுவுக்காக, ஒட்டுமொத்த காங்கிரசும் சூரத் சென்றுள்ளது நீதிமன்றத்தை மிரட்டும் செயல் என பாஜக விமர்சித்துள்ளது.
அதேசமயம் 3 மாநிலங்களில் வாக்களித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளான முதலமைச்சர், தங்கள் மாநிலங்களின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்போம் என அரசியல் சாசனத்தின் மீது உறுதிமொழி எடுத்தவர்கள் ராகுலுக்காக சூரத் சென்றது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டிருந்தால், எளிதாக முடிந்திருக்க ஒரு வழக்கு, ராகுல்காந்தியின் ஈகோவால் தான் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இப்போது அவரது ஈகோவுக்கு அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் பலியாகி கொண்டிருக்கின்றனர். அவமானங்களை சந்தித்து வருகின்றனர்.