உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. அதன்படி இதுவரை 6 சுற்று ஏலங்கள் நிறைவடைந்த நிலையில், 7வது கட்டமாக தமிழ்நாடு ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டது
இதில் தமிழ்நாட்டின் சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரி நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க ஏலம் கோரப்பட்டது. இந்நிலையில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனையொட்டிய இந்த பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க கூடாது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விவசாயிகள் உணர்வையும், காவிரி டெல்டாவின் முக்கியத்துவதையும் உணர்ந்த தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, விவசாய நிலங்களில் நிலக்கரி சுரங்கம் அமைக்க விடமாட்டோம் என்றே தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் இன்று பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி ரவி மற்றும் தலைவர் அண்ணாமலை ஆகியோர் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியை நேரில் சந்தித்தனர். அப்போது தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கும் நடவடிக்கையை கைவிடக் கோரி மனு அளித்தனர். இந்நிலையில் மத்திய அமைச்சரிடம் தான் அளித்த மனுவை தலைவர் அண்ணாமலை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
1.2020ம் ஆண்டு தமிழ்நாட்டின் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களை தமிழ்நாடு அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. இதன்மூலம் இந்த பகுதிகளில் இருந்து ஹைட்ரோகார்பன் எடுக்க நிரந்தமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது
2. 2011ம் ஆண்டு டெல்டா மாவட்டங்களின் ஹைட்ரோகார்பன் எடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்போரேஷன் என்ற நிறுவனத்துடன் திமுக அரசு போட்ட ஒப்பந்தத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக இந்த பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது
3. முந்தைய காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியில் சேத்தியாதோப்பு, மைக்கேல்பட்டி மற்றும் வடசேரியில் நிலக்கரி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அப்பகுதி மக்கள் நிலக்கரி மற்றும் மீத்தேன் எடுப்பதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன்மூலம் நிலத்தடிநீர், விவசாயம் பாதிக்கப்படும் என அச்சம் தெரிவிக்கின்றனர்.
4. எனவே அண்மையில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் ஒப்பந்த அறிவிப்பில் இருந்து இந்த மூன்று ஊர்களையும் நீக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
5. இந்த கடிதத்தை டிவிட்டரில் பகிர்ந்த அவர், பிரதமர் மோடியின் அரசு விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் எனவும் விவசாயிகளுக்கு என்றென்றும் துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.