தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியை பாஜக குழுவினர் நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது தமிழ்நாடு அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை எடுத்து கூறி உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தனர். பட்டியலின மக்களின் நலனுக்காக மத்திய அரசு வழங்கிய 16 ஆயிரம் கோடி ரூபாய் நிதியில், 10 ஆயிரம் கோடி ரூபாயை பயன்படுத்தாமல், பட்டியலின மக்களுக்கான எந்த நலத்திட்டங்களையும் செயல்படுத்தாமல் தமிழ்நாடு வஞ்சிப்பதாக தெரிவித்தனர்.
மேலும் பட்டியலின மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை, மீட்க சிறப்பு சட்டம் ஒன்றை இயற்ற தமிழ்நாடு அரசை ஆளுநர் வலியுறுத்த வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தனர். மேலும் தமிழ்நாட்டில் மதமாற்றத்தை ஊக்குவிக்கும் மதம் மாறிய ஆதிதிராவிடர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற தீர்மானத்துக்கு ஒப்புதல் வழங்க கூடாது எனவும் வலியுறுத்தினர்.
அண்மையில் வெளியான நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதியும், மருமகன், சபரீசனும் சேர்ந்து கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ரூ.30,000 கோடி அளவுக்கு சொத்து சேர்த்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த ஆடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக பாஜக குழுவினர் ஆளுநரை சந்தித்து மனு அளித்தனர். பாஜக துணை தலைவர் வி.பி துரைசாமி தலைமையிலான குழுவினர் சென்று மனு அளித்தனர். அந்த மனுவில் பிடிஆரின் குரலை தடவியல் தணிக்கை செய்ய வேண்டும் எனவும், உதயநிதி மற்றும் சபரீசனை விசாரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தனர். இந்நிலையில் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக ஆளுநரை சந்தித்து திமுக அரசு மீது புகார் அளித்துள்ளனர். அடுக்கடுக்கான புகார்களால் தமிழ்நாடு அரசு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது.