பீகாரில் கடந்த 1994ம் ஆண்டு கோபால்கன்ஞ் மாவட்ட ஆட்சியராக இருந்த கிருஷ்ணய்யா என்பவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பட்டியலினத்தை சேர்ந்த கிருஷ்ணய்யா, கூலி தொழிலாளியாக தனது வாழ்க்கையை தொடங்கி பத்திரிகையாளராக மாறி அதன்பின் மாவட்ட ஆட்சியரானவர்.
கிருஷ்ணய்யா கொலைக்கு காரணமான முக்கிய குற்றவாளி ஆனந்த் மோகன் சிங் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். லல்லு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஆனந்த் மோகன் சிங், சியோகர் என்ற தொகுதியின் எம்பியாக இருந்தார்.
கலெக்டர் கொலையின் முதல் குற்றவாளியாக இருந்த இவருக்கு 2007ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 2008ம் ஆண்டு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் அண்மையில் பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், ஐக்கிய ஜனதா தளமும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைத்தன.
இதனை தொடர்ந்து ஆனந்த் மோகன் சிங்கை விடுவிப்பதற்காக சிறை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அந்த திருத்தங்களின் அடிப்படையில் ஆனந்த் மோகன் சிங் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நடவடிக்கையின் மூலம் நிதிஷ்குமார் அரசு, பீகாரில் மீண்டும் காட்டு ஆட்சியை கொண்டுவந்துள்ளதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பட்டியலின கலெக்டரை கொடூரமாக கொலை செய்தவரை விடுவித்த இத்தகையவர்களுடன் சேர்ந்து கொண்டா சமூக நீதி பேசுகிறீர்கள் என திமுகவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
பட்டியலின கலெக்டர் மரணத்துக்கு உரிய நீதி கிடைக்காமல் அநீதி இழைத்த இவர்கள் எல்லாம், சமூக நீதி பற்றி பாடம் எடுக்கிறார்கள் எனவும் அவர் விமர்சித்துள்ளார்.