இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் மதுப்புழக்கம் குறைவா ?; புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன ? பாகம் -2

தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு -5 மற்றும் கிரைசல் (Crisil)  சொல்லும் மற்றொரு முக்கிய தகவல் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களின் மதுப்பயன்பாடு ஒட்டுமொத்த இந்தியாவின் மதுப்பயன்பாட்டில் 45 சதவீதமாக உள்ளது என்பது தான். இந்த 5 மாநிலங்களில் தெலங்கானாவில் 43.4 சதவீதம் பேரும், ஆந்திராவில் 34.5 சதவீதம் பேரும், கேரளாவில் 20 சதவீதம் பேரும் தமிழ்நாட்டில் 15 சதவீதம் பேரும், கர்நாடகாவில் 14 சதவீதம் பேரும் மது அருந்துவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு அடுத்தபடியாக மதுவின் மூலம் அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களை ஒப்பிட்டளவில் பார்ப்போம். கடந்த 2022ம் ஆண்டு ஆர்பிஐ வெளியிட்ட புள்ளி விவரப்படி உத்தப்பிரதேசம் அதிகமாக 31 ஆயிரத்து 500 கோடி ரூபாயை மதுவுக்கான வரிமூலம் வருவாயாக பெற்றுள்ளது. அதற்கு அடுத்தபடியாக 20 ஆயிரத்து 950 கோடி ரூபாய் வருவாயுடன் கர்நாடகா இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை வெறும் 7 ஆயிரத்து262 கோடி ரூபாய் வருமானம் மட்டுமே கிடைத்ததாக ஆர்பிஐ அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால் உண்மை என்ன ? 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த பிறகு பேட்டியளித்த நிதித்துறை செயலாளர், கடந்த ஆண்டில் டாஸ்மாக் வருமானம் 45 ஆயிரம் கோடி ரூபாய் எனவும் இதனை 50 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப்படியென்றால் டாஸ்மாக் மூலம் வருமானம் ஈட்டும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் தானே உள்ளது.

கடந்த ஆண்டை விட 5 ஆயிரம் கோடி ரூபாய் அதிகம் வருமானம் ஈட்ட வேண்டுமானால், இன்னும் பல இளைஞர்களையும், கூலி தொழிலாளர்களையும், பெண்களையும் குடிகாரர்களாக…! இல்லை இல்லை மதுப்பிரியர்களாக மாற்ற வேண்டுமே …

அதற்கான பணிகள் தான் கடந்த சில நாட்களாக நாம் காணும் காட்சிகள். வணிக வளாகங்களில் இயந்திரங்கள் மூலம் மது விற்பனை, திருமண நிகழ்ச்சிகள், விளையாட்டு மைதானங்களில் மதுவிற்பனைக்கு அனுமதி போன்றவை. இவர்களின் பணவெறி இன்னும் எவ்வளவு தூரம் கொண்டு செல்லும் என்பதை நினைக்கும் போது சாதாரண மக்களுக்கு அச்சம் அதிகரிக்கிறது. கேரளா, கோவா போன்ற மாநிலங்களில் இருக்கும் சோசியல் ட்ரிங்கிங் என்ற வழக்கத்தை தமிழ்நாட்டிலும் புழக்கப்படுத்த கடும் முயற்சி செய்யப்படுகிறது.

டாஸ்மாக் மூலம் மதுவிற்பனை தொடங்குவதற்கு முன்பாக சாராயத்தையும், சாராயம் குடிப்பவர்களையும் வெறுப்பாக பார்த்த தமிழ்நாடு இன்று அதனை சகஜமாக ஏற்று கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கிராமங்களில் இளைஞர்கள், நடுவயதினர், முதியோர் என அத்தனை பேரின் உடல்நலனும் பாதிக்கப்பட்டுள்ளது. மதுவினால் உடல்நலன் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. மதுவினால் நடைபெறும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

35 ஆயிரம் கோடி வருமானம் இருக்கும் போதே தமிழ்நாட்டில் இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறிய கனிமொழி, 50 ஆயிரம் கோடி இலக்கை அடைய எத்தனை பேரின் தாலியை தமிழ்நாடு அரசு அறுக்கப் போகிறது என்ற கேள்விக்கு பதில் சொல்வாரா ?

ஒரு பேட்டியில் டாஸ்மாக்கில் ஈட்டும் வருவாயில் 50 சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வருவதாக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார். மீதியுள்ள வருமானம் யாருக்கு செல்கிறது என்பதை அண்மையில் லீக் ஆன அவரது ஆடியோ தெளிவாக விளக்கியது. உண்மை இப்படி இருக்க மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் மதுப்புழக்கம் குறைவு என்ற பேச்சுக்கள், மக்களின் கோபத்தை மடைமாற்றும் முயற்சிகளே அன்றி வேறு இல்லை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top