பாஜக பட்டியல் அணி மாநில பொருளாளர் PPGD.சங்கர் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார். காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அவரை வெடிகுண்டுகள் வீசியும், அரிவாளால் சரமாரியாக வெட்டியும் மர்ம கும்பல் ஒன்று படுகொலை செய்தது. இந்த படுகொலைக்கு காரணமான 9 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். இந்நிலையில் சங்கரின் கொலைக்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை பெற்று தரவும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னையில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி துரைசாமி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநில பொதுச் செயலாளர் பொன்.பால கணபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல பெரம்பலூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா.பெரியசாமி பங்கேற்றார்.
சங்கர் கொலைக்கான உண்மை காரணத்தை கண்டறிய வேண்டும் எனவும், வேறு காரணங்களை சொல்லி குற்றவாளிகள் தப்பி செல்ல வழிவகுத்து விடக் கூடாது எனவும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினர்.