திராவிட மாடல் அரசு தனது இரண்டு ஆண்டு கால பதவிக்காலத்தை முடித்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் தனது இரண்டு ஆண்டுகள் ஆட்சியின் சாதனைகளை விளக்கி மாநிலம் முழுவதும் 1,222 இடங்களில் பொதுக்கூட்டங்கள் நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், ஆதரவாளர்கள் என ஏராளமானோர் பேச உள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு கடந்த 3ம் தேதி அக்கட்சியின் அதிகாரப் பூர்வ பத்திரிக்கையான முரசொலியில் வெளியானது.
இதில் மதுரை சிம்மக்கல் பகுதியில் நிதியமைச்சரும், மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிம்மக்கல் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த பொதுக்கூட்டம் தொடர்பான போஸ்டர்களில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பிடிஆரின் பெயருக்கு பதிலாக, ஜெயரஞ்சனின் பெயர் இடம்பெற்றுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிடிஆரின் பெயர் நீக்கப்பட்டதற்கு அண்மையில் வெளியான ஆடியோ விவகாரமே காரணம் என கூறப்படுகிறது. அந்த ஆடியோவில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், திமுகவின் அதிகார மையங்களாக உள்ள உதயநிதி மற்றும் சபரீசனை கடுஞ் சொற்களால் சாடியிருந்தார்.
இந்த விவகாரம் பெரிதான நிலையில் அதற்கு விளக்கம் அளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், அந்த ஆடியோ என்னுடையே குரலே அல்ல என தெரிவித்தார். மேலும் உதயநிதி சிறந்த அமைச்சர் எனவும், சபரீசன் எனக்கு வழிகாட்டி எனவும் பேசியிருந்தார்.
அண்மையில் ஆடியோ விவகாரம் தொடர்பாக பேசியிருந்த ஸ்டாலின், ஆடியோ விவகாரத்தில் போதுமான விளக்கத்தை பிடிஆர் அளித்து விட்டார் எனவும், மக்கள் பணிக்கே தனக்கு நேரம் சரியாக இருப்பதால் இது குறித்து பேச மாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தான் பிடிஆரின் பெயர், பேச்சாளர்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. விரைவில் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்படலாம் எனவும் பேச்சுக்கள் உலா வருகின்றன.
சமூக வலைதளங்களில் இருந்து வெளியான ஆடியோ போலி என்றால், பிடிஆரை #திராவிடமாடல் அரசு ஒதுக்க வேண்டிய காரணம் என்ன என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.