இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக, இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் கடந்த ஏப்ரல்-23ம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு எதிராக தொடங்கிய இந்த போராட்டம் மெதுமெதுவாக பிரதமர் மோடிக்கு எதிரான போராட்டமாக மாறியுள்ளது. இந்நிலையில் இதன் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம் …
பிரிஜ் பூஷன் சிங் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக உள்ளார். கடந்த 2012 முதல் இப்பதவியில் இருக்கும் இவர், மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவரது பதவி காலத்தில் தான் இந்திய வீரர்கள் மல்யுத்தத்தில் பதக்கங்களை குவித்தனர். அந்த பதக்கங்களை வென்ற பெரும்பாலான வீரர்கள் ஹரியான மாநிலத்தை சேர்ந்தவர்களாவர்.
இந்திய மல்யுத்த வரலாற்றை பொறுத்தவரை ஹரியானா மாநிலம் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எனினும் அம்மாநில வீரர்கள் மற்றும் கூட்டமைப்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை மற்ற மாநில வீரர்கள் சுமத்தியுள்ளனர்.
அவற்றில் 2016ம் ஆண்டு சுஷில் குமார் என்ற ஹரியானா வீரருக்கும், நர்சிங் யாதவ் என்ற உத்தரப்பிரதேச வீரருக்கும் இடையே நடைபெற்ற வழக்கு மிகவும் பிரபலமானது. முந்தைய ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரரான சுஷில்குமார், அந்த ஆண்டு நடைபெற இருந்த ரியோ ஒலிம்பிக்ஸ்சில் கலந்து கொள்ள விரும்பினார். ஆனால் இந்திய மல்யுத்த வீரர்கள் கூட்டமைப்பு, சுஷில்குமாரை விட திறமை வாய்ந்த நர்சிங் யாதவ் என்ற மற்றொரு மல்யுத்த வீரர் பங்கேற்க அனுமதி வழங்கியது.
இதனால் சுஷில்குமார் தரப்பு உச்சநீதிமன்றம் சென்ற நிலையில், உச்சநீதிமன்றம் நர்சிங் யாதவுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது. எனினும் அவர் ரியோவுக்கு புறப்படும் சமயத்தில் ஊக்கமருந்து சோதனையில் தோற்றார்.
இந்த விவகாரத்தில் சுஷில்குமாரும், ஹரியானா மல்யுத்த கூட்டமைப்புமே தனது உணவில் ஊக்கமருந்தை கலந்ததாக நர்சிங் யாதவ் குற்றம்சாட்டி வருகிறார்.
2020ல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்சில் ஹரியானாவை சேர்ந்த மற்றொரு வீராங்கனையும், தற்போது போராட்டம் நடத்தி வருபவர்களில் ஒருவருமான வினேஷ் போகட், ஒரு சர்ச்சையில் சிக்கினார். அவர் அணிந்திருந்த உடையில் தேசிய கொடி இருக்க வேண்டிய இடத்தில் விளம்பரதாரர் லோகோ இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் விதிகளையும் அவர் பின்பற்றவில்லை என குற்றம்சுமத்தப்பட்டது.
இந்த நிலையில் சர்வதேச போட்டிகளுக்கான வீரர்களை தேர்ந்தெடுப்பதில் ஒரு புதிய விதியை கொண்டு வந்தது தான் ஹரியானாவின் குறிப்பிட்ட வீரர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தியது.
உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வீரர்கள் மட்டுமே சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள் எனவும், சர்வதேச போட்டிகளில் எத்தனை பதக்கங்களை வென்றாலும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனை ஹரியானா மல்யுத்த கூட்டமைப்பு கடுமையாக எதிர்த்தாலும் தேசிய மல்யுத்த கூட்டமைப்பு திருத்தப்பட்ட விதிகளில் உறுதியாக இருந்தது.
இது மிகப்பெரிய பிரச்சனையாக மாற, ஹரியானா மல்யுத்த கூட்டமைப்பு கலைக்கப்பட்டது. அதன் தலைவர் தீபேந்தர் ஹூடாவை பதவியில் இருந்து நீக்கி புதிய தலைவராக ரோட்டாஸ் என்பவரை தேசிய மல்யுத்த கூட்டமைப்பு நியமித்தது.
இதே சமயத்தில் பஜ்ரங் புனியா, வினேஷ் போகாட், சாக்சி மாலிக் ஆகிய மூவரும் இந்த புதிய விதிகளை எதிர்த்ததுடன், 2022 டிசம்பரில் குஜராத் மற்றும் டெல்லியில் நடைபெற்ற தேசிய போட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தனர்.
இதனையடுத்து உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற, அந்திம் பன்கல், சிவானி பன்வார் உள்ளிட்டோர் ஆசிய போட்டிகளில் பங்கேற்பார்கள் என தேசிய மல்யுத்த கூட்டமைப்பு அறிவித்தது
இந்நிலையில் 2023 ஜனவரியில் பிரிஜ் பூஷன் சிங்கிற்கு எதிராக, ஜந்தர் மந்தரில் போராட்டம் தொடங்கப்பட்டது.
2023 ஜனவரி மாதம், ஜந்தர் மந்தரில் அவர்கள் போராட்டம் தொடங்கிய போது, பிபி சிங் மிகவும் ஆணவப் போக்குடன் நடந்து கொள்வதாக மட்டுமே கூறினர். அதன்பிறகே பாலியல் அத்துமீறல் புகார்களை கூறினர்.
இவர்களுக்கு ஹரியானா மல்யுத்த கூட்டமைப்புன் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட தீபேந்தர் ஹூடாவும், அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியும் ஆதரவு அளித்துள்ளன. குறிப்பாக வினேஷ் போகாட் தனக்கு ஆதரவளிக்க அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதுதான் சமயம் என அரவிந்த் கெஜ்ரிவால், பிரியங்கா ராபர்ட் வதோரா, உள்ளிட்ட அரசியல் கட்சிகள் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இது போதாது என்று சம்யுக்த கிஷான் மோர்ச்சா என்ற விவசாய அமைப்பும் மல்யுத்த வீரர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து களம் இறங்கியுள்ளது. வரும் 11-18ம் தேதி வரை நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இவ்வாறு மல்யுத்த வீரர்களுக்கும், தேர்ந்தெடுக்கும் குழுவுக்கும் இடையேயான பிரச்சனை பிரதமர் மோடிக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்யும் களமாக மாறியுள்ளது. சிஏஏவுக்கு எதிரான போராட்டம், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை போல இந்த போராட்டமும் நீண்ட நாட்கள் நடக்க வாய்ப்புள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் …